ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்..டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி!

தேர்தல் பறக்கும் படையினரால் தாம்பரத்தில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

Apr 26, 2024 - 20:08
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்..டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி!

தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஓட்டுக்கு பணம் விநியோகிக்கப்படுவதை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தி உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம், நகை, பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

இந்த நிலையில் கடந்த 6- தேதி நெல்லை செல்லும் ரயிலில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்  தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்தனர். 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளை அதிரடியாக பறிமுதல் செய்த அதிகாரிகள், சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் எனவும் பணம் பட்டுவாடா செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதனால் இந்த வழக்கை தாம்பரம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். 

இந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்க நயினார் நாகேந்திரன் பத்து நாட்கள் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து தாம்பரம் காவல்துறை அலுவலகம் சார்பில் இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, மே-2ம் தேதி நயினார் நாகேந்திரன் ஆஜராகும் படி உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றும்படி தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் பரிந்துரை செய்த நிலையில் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும் விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி டிஎஸ்பி சசிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து வழக்கு ஆவணங்களை ஒப்படைக்கும்படி தாம்பரம் போலீசாரிடம் சிபிசிஐடி போலீசார் கேட்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow