பாட்டி இந்திராவின் கோட்டை.. அம்மா சோனியா சென்மெண்ட்.. ராகுல் களமிறங்கும் ரேபரேலி சரித்திரம்.. சாதிப்பாரா?
உத்தரப் பிரதேசத்தில் இந்திரா காந்தியின் காந்தியின் கோட்டையாகவும் சோனியாகாந்தியின் வெற்றி தொகுதியாகவும் இருந்த ரேபரேலியில் களமிறங்குகிறார் ராகுல் காந்தி. கேரளா மாநிலம் வயநாட்டை தொடர்ந்து ரேபரேலி தொகுதியிலும் ராகுல்காந்தி போட்டியிடுவதாக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. கேரள உட்பட 89 தொகுதிகளுக்கு கடந்த 26ஆம் தேதி இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
கேரளாவின் வயநாட்டில் கடந்த முறை வெற்றி பெற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இம்முறையும் அதே தொகுதியில் களமிறங்கியுள்ளார். இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிபிஎம் வயநாட்டில் ராகுல்காந்தியை எதிர்த்து டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜாவை களமிறக்கியது. கேரளாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வயநாட்டில் 72.69 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்த மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டு வந்தது. அந்த வகையில் ஏற்கனவே வயநாடு தொகுதி அறிவிக்கப்பட்டு வாக்குப்பதிவு முடிந்துள்ளது.
இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் ரேபரேலி, அமேதி ஆகிய இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படாமல் இருந்தது. இவ்விரு தொகுதிகளுக்கும் வரும் 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைய உள்ளது.
ரேபரேலி தொகுதியில் 4 முறை வெற்றி பெற்ற சோனியா காந்தி, இந்த முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகி உள்ளார். இதையடுத்து ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி களமிறங்குவார் என்று கூறப்பட்டு வந்தது.
கடந்த முறை அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இரானியிடம் தோல்வியடைந்த ராகுல்காந்தி, வயநாட்டில் வெற்றி பெற்றார். இந்த முறை அமெதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்ட முடியுமா என ராகுல் காந்திக்கு ஸ்மிரிதி இரானி சவால் விடுத்திருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், ராகுல் காந்தி ஆகியோர் நேற்று நள்ளிரவு வரை ஆலோசனை மேற்கொண்டனர். இதற்கிடையில் ரேபரேலி, அமெதி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் தலைமை இன்று காலை அறிவித்துள்ளது.
அமேதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டியிடுவார்; ரேபரேலியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று அமேதியில் கிஷோரி லால் சர்மா, ரேபரேலியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.
ரேபரேலி தொகுதியானது காங்கிரஸ் அல்லது நேரு- இந்திரா குடும்பத்தின் கோட்டை என்றுதான் சொல்ல வேண்டும். 1952, 1957 தேர்தல்களில் நேருவின் மருமகன் - இந்திராவின் கணவர்- ராகுல் காந்தியின் தாத்தா பெரோஸ் காந்தி போட்டியிட்டு எம்பியாக இருந்தார். 1967 ஆம் ஆண்டில் ரேபரேலி லோக்சபா தொகுதியில் இந்திரா காந்தி போட்டியிட்டு வென்றார்.
1971ஆம் ஆண்டில் மீண்டும் இந்திரா காந்தி வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்திராவின் வெற்றி செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில்தான் நாட்டில் அவசரநிலை எனும் எமர்ஜென்சியை அமல்படுத்தப்பட்டது. 1977-ல் ரேபரேலியில் இந்திராவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த ராஜ்நாராயணன் போட்டியிட்டு வென்றார். ஆனால் 1980-ல் இந்திரா காந்தியே மீண்டும் ரேபரேலியில் போட்டியிட்டு அமோக வெற்றியைப் பெற்றார்.
1980-ல் இந்திரா காந்தி ரேபரேலி மற்றும் அன்றைய ஆந்திராவின் மேடக் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வென்றார். பின்னர் ரேபரேலி தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்தார். 1984-ல் இந்திரா காந்தி அம்மையார் சுட்டுப் படுகொலை செய்யப்படும் வரை மேடக் தொகுதி எம்பியாகவே இருந்தார்.
1984ஆம் ஆண்டில் இந்திரா காந்தி மறைவைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில் நேரு குடும்பத்தைச் சேர்ந்த அருண் நேரு போட்டியிட்டு வென்றார். 1989, 1991ஆம் ஆண்டில் காங்கிரஸ் வேட்பாளராக ஷீலா கவுல் போட்டியிட்டு வென்றார். ஆனால் 1996, 1998-ல் பாஜக வேட்பாளர் அசோக் சிங் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1999 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் சதீஷ் ஷர்மா வென்று மீண்டும் காங்கிரஸ் கட்சி ரேபரேலியை கைப்பற்றியது.
2004 முதல் 2019ஆம் ஆண்டு வரை சோனியா காந்தி, ரேபரேலியில் போட்டியிட்டு வென்றார். ராஜ்யசபா எம்பியான சோனியா: தற்போது சோனியா காந்தி ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகிவிட்டார். இதனால் ரேபரேலி தொகுதியில் நேரு குடும்பத்தில் இருந்து யார் வேட்பாளர் என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது. இத்தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடக் கூடும் எனவும் கூறப்பட்டது. ஆனால் புதிய திருப்பமாக ராகுல் காந்தியே ரேபரேலி லோக்சபா தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?