Rajinikanth: ஜெயலலிதாவை எதிர்க்க இதுவும் ஒரு காரணம்.. 95-ல் நடந்த சம்பவம் குறித்து ரஜினி ஓபன் டாக்
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்தவர்களில் ஒருவரான ஆர்.எம்.வீரப்பன் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி காலமானார். இந்நிலையில் ஆர்.எம்.வீரப்பன் குறித்த ஆவணப்படத்திற்காக ரஜினிகாந்த் அளித்த பேட்டி சமூக வலைத்தளங்களில் பேசுப்பொருளாகியுள்ளது.

ஆரம்பக்கட்டத்தில், ஆர்.எம்.வீரப்பன் மறைந்த முதல்வரான எம்.ஜி.ஆரின் நாடகக் குழுவின் மேனேஜராக பொறுப்பு வகித்தார். எம்.ஜி.ஆரின் திரைத்துறை மற்றும் அரசியல் பயணத்தில் பக்கப்பலமாக விளங்கிய நபர்களுள் ஆர்.எம்.வீரப்பனும் ஒருவரும். 1963 ஆம் ஆண்டு, தனது தாயார் பெயரில் சத்யா மூவிஸ் என்கிற படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் ஆர்.எம்.வீ. தன் நிறுவனம் மூலம் எம்.ஜி.ஆரின் பல பிளாக் பஸ்டர் திரைப்படங்களை இவர் தயாரித்துள்ளார். திரைத்துறையில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக கோலோச்சி வந்த காலத்தில் அரசியலிலும் எம்.ஜி.ஆர் உடன் இணைந்து தன் தடத்தை வலுவாக பதித்தார்.
அதிமுக ஆட்சியில் சட்ட மேலவை உறுப்பினராகவும், திருநெல்வேலி மற்றும் காங்கேயம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ-வாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின், ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவிலும் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார். ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்து வந்த ஆர்.எம்.வீ திடீரென்று அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு காரணம் ரஜினி என பேசப்பட்டு வந்த நிலையில், ரஜினி அதனை உறுதி செய்துள்ளார்.
நான் மேடையில் அப்படி பேசியிருக்கக் கூடாது: ரஜினி
மறைந்த ஆர்.எம்.வீ குறித்து தயாராகியுள்ள ஆர்.எம்.வீ- கிங் மேக்கர் ஆவணப்படத்தில் ரஜினி தன் நினைவலைகளை பகிர்ந்துள்ளார். ஆர்.எம்.வீ குறித்த ரஜினி பேசியவை பின்வருமாறு-
”ஆர்.எம்.வீ குறித்த ஆவணப்படத்தில் நான் பேசுவதில் ரொம்ப மகிழ்ச்சி. என் வாழ்வில் ரொம்ப நெருக்கமா இருந்த நபர்கள் வெகு சிலர். அதில், பாலச்சந்தர் சார், பஞ்சு அருணாச்சலம், சோ, ஆர்.எம்.வீ சார்.இவங்க எல்லாம் இப்ப இல்லனு நினைக்கும் போது.. ரொம்ப மிஸ் பண்றேன். 1995 ஆம் ஆண்டு பாட்ஷா திரைப்படத்தின் 100 வது வெற்றி நாள் விழாவில், பாட்ஷா படத் தயாரிப்பாளராக அவரும் பங்கேற்று மேடையில் இருந்தார். அப்போது அதிமுக ஆட்சியில் அவர் அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார்.
மேடையில் நான் வெடிக்குண்டு கலச்சாரம் குறித்து பேசியிருக்கக்கூடாது. எனக்கு அப்போது சரியான தெளிவில்லை. மேடையில் அதிமுகவின் அமைச்சராக அவர் அமர்ந்திருக்கும் போது, ஜெயலலிதா அரசுக்கு எதிரா பேசுனது பேசுப்பொருளாகியது.
அமைச்சரவையிலிருந்து ஆர்.எம்.வீரப்பனை, ஜெயலலிதா அவர்கள் தூக்கிட்டாங்க. என்னால் தான் ஆர்.எம்.வீரப்பனின் பதவி பறிப்போனது என நினைத்து எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு, தூக்கமே வரல..உடனே போன் பண்ணேன், அந்த சைடு இருந்து பேசிய ஆர்.எம்.வீ, ”அதை நீங்க விடுங்க..மனசுலயே நீங்க வச்சுக்க வேண்டாம்.. இப்ப என்ன சூட்டீங்னு?” சாதாரணமா பேச ஆரம்பிச்சுட்டாரு.. ஜெயலலிதாவுக்கு எதிராக நான் பேச சில காரணங்கள் இருந்தாலும், இந்த காரணம் அதுல ரொம்ப முக்கியமானது.
கொஞ்ச நாளுக்கு பிறகு ஆர்.எம்.வீ-யிடம் சொன்னேன்..நான் வேணும்னா ஜெயலலிதாவிடம் பேசட்டுமானு கேட்டேன்.. ”அந்த அம்மா ஒருதடவை முடிவு எடுத்துட்டா மாற்ற மாட்டங்க.. நீங்க பேசி உங்க மரியாதையினை கெடுத்துக் கொள்ள வேண்டாம். அப்படி நீங்க சொல்லி, நான் அங்கப்போய் சேர வேண்டிய அவசியமில்லை. இதை விட்டுருங்கனு சொன்னாரு”.. அவர் நல்ல மனிதர்.கிங் மேக்கர்.. உண்மையிலேயே ஆர்.மே.வீ கிங் மேக்கர்” என வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
1995-ஆம் நடந்த சம்பவத்தை மீண்டும் நினைவுப்படுத்தி ரஜினி பேசிய காணொளியில் இணையதளங்களில் தீயாக பரவி வருகிறது.
What's Your Reaction?






