கிளி ஜோசியரிடம் 20 லட்ச ரூபாய், 1 கிலோ வெள்ளியை பறி கொடுத்த இன்கம் டேக்ஸ் ஆபீசர்
பரிகாரம் செய்வதாக சொல்லி இன்கம் டேக்ஸ் ஆபீசரிடம் 20 லட்ச ரூபாய், தங்கம், 1 கிலோ வெள்ளியை ஏமாற்றி கிளி ஜோசியகாரரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூருவில் உள்ள பாரதி நகரை சேர்ந்த 55 வயதான குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இன்கம் டாக்ஸ் ஆபீசராக கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மார்ச் 6-ம் தேதி பாரதிநகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து உள்ளார்.
அந்த புகாரில் கடந்த டிசம்பரில் கிளி ஜோசியர் சேகர் (59) எனக்கு அறிமுகமானார். எனது ஜாதகத்தை பார்த்த அவர் கிளி ஜோசியம் பார்த்தார். எனக்கு பணி இட மாற்றமும், பதவி உயர்வும் கிடைக்க வேண்டுமென்றால் அமாவாசை அன்று இரவு சிறப்பு யாகம் நடத்த வேண்டும் என கூறினார்.
இதற்காக முதல்கட்டமாக அவருக்கு ரூ. 50 ஆயிரம் கொடுத்தேன். பின்னர் எனது வீட்டில் உள்ள பணம், தங்க நகைகள், வெள்ளிப் பொருட்களை வைத்து ஒரு நாள் முழுவதும் யாகம் நடத்தினால் செல்வம் மேலும் செழிக்கும் என கூறினார். அதை நம்பி அவரிடம் ரூ.20 லட்சத்து 55 ஆயிரம் ரொக்கம், 193 கிராம் தங்க நகைகள், 1.3 கிலோ வெள்ளிப் பொருட்களை கொண்டு சென்று கொடுத்தேன். பூஜையை முடித்து பொருட்களை தருவதாக சொன்ன அவர், பின்னர் ஜோசியரை காணவில்லை என அந்த புகாரில் கூறியிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் பாரதி நகர் போலீஸார் கிளி ஜோசியர் சேகரின் செல்போன் எண்ணை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். தமிழகத்தை சேர்ந்த அவர், தினமும் ரயிலில் பெங்களூருவுக்கு வந்து கிளி ஜோசியம் பார்த்து செல்வது தெரியவந்தது. அவரிடம் கிளி ஜோசியம் பார்க்க விரும்புவதாக போலீஸார் ஆசை வார்த்தைகளைக் கூறி, பெங்களூருவுக்கு வரவழைத்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு பெங்களூருவுக்கு வந்த கிளி ஜோசியர் சேகரை கைது செய்தனர். அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்டமாக, அவரிடம் இருந்து ரூ.12 லட்சம் ரொக்கம், 147 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?

