வெற்றி பெறச்செய்த ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு நன்றி - ராகுல் காந்தி

ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய மாநாடு - காங்கிரஸ் கூட்டணி வெற்றிப் பெற்றிருக்கும் நிலையில் அம்மக்களுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நன்றி தெரிவித்திருக்கிறார். 

Oct 9, 2024 - 15:52
வெற்றி பெறச்செய்த ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு நன்றி - ராகுல் காந்தி
rahul gandhi

ஹரியானா மற்றும் ஜம்முக் காஷ்மீர் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் அதன் முடிவுகள் நேற்று எண்ணப்பட்டன. 90 இடங்களைக் கொண்ட ஹரியானாவில் முதலில் காங்கிரஸ் 50க்கும் அதிகமான இடங்களில் முன்னணி பெற்றது. பின்னர் அப்படியே தலைகீழாக மாறி பாஜக முன்னிலை பெற்று இறுதியாக 48 இடங்களை பிடித்த பாஜக தொடர்ந்து 3வது முறையாக தனது ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்து ஹரியானாவில் ஆட்சி அமைக்கவிருக்கிறது. 37 இடங்களைப் பிடித்து தோல்வி அடைந்த காங்கிரஸ், தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது மெதுவாக அப்டேட் செய்ததாக தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம்சாட்டியிருக்கிறது. இந்தத் தோல்வியை ஏற்கமாட்டோம் என்றும் கூறியிருக்கிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறப்பட்ட நிலையில் அதற்கு மாறான முடிவு வெளியாகியிருக்கிறது. 

ஹரியானாவைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் மாநில தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டன. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துக் களமிறங்கிய நிலையில் 90 தொகுதிகளில் இண்டியா கூட்டணி 49 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஜம்மு - காஷ்மீரில் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்பார் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்ல தெரிவித்திருக்கிறார். 

இரு மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். 

“ஹரியானாவில் எங்களது தோல்வி நாங்கள் முற்றிலும் எதிர்பார்த்திராத முடிவு. அத்தோல்வி நிகழ்ந்ததற்கான காரணங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். நிறைய சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து வந்த புகார்கள் பற்றித் தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவிபப்போம். என்று கூறியவர் அடுத்ததாக,  "ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாடு - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றிருப்பது ஜனநாயக சுயமரியாதைக்குக் கிடைத்த வெற்றி. ஜம்மு-காஷ்மீர் மக்களுக்க என்னுடைய இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தின் வெற்றி இந்தியாவின் வெற்றி. இந்திய அரசியலமைப்பின் வெற்றி" என்று கூறியிருக்கிறார். 

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow