தமிழகத்தில் நாளை தொடங்குகிறது வேட்புமனு தாக்கல்... எதையெல்லாம் செய்யக் கூடாது... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...

Mar 19, 2024 - 20:44
தமிழகத்தில் நாளை தொடங்குகிறது வேட்புமனு தாக்கல்... எதையெல்லாம் செய்யக் கூடாது... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...

மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழ்நாட்டில் நாளை தொடங்குவதையொட்டி அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

நாடு முழுவதும் 534 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் அன்றைய தினமே நடைபெறுகிறது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (மார்ச்-20) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் நிறைவு மார்ச் 27ஆம் தேதியும், வேட்புமனு பரிசீலனை மார்ச் 28ஆம் தேதியும் நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்ப பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வேட்புமனு தாக்கலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலக்தில் இருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்களுக்கும், வேட்பாளருடன் சேர்த்து 5 நபர்களுக்கும் மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை(மார்ச்-20) முதல் மார்ச் 27ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே மனுத்தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சென்னையை பொறுத்தவரை மத்திய சென்னைக்கு செனாய் நகர் வட்டார துணை ஆணையர் அலுவலகத்திலும், வடசென்னைக்கு பழைய வண்ணாரப்பேட்டை வட்டார துணை ஆணையர் அலுவலகத்திலும், தென்சென்னைக்கு அடையாறு தெற்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்திலும் மனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow