49-வது சென்னை புத்தக கண்காட்சி : ஜனவரி 8 முதல் 21 -ம் தேதி வரை நடக்கிறது
49-வது சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 8-ம் தேதி தொடங்கி 14 நாட்கள் நடைபெற உள்ளது.
49வது புத்தக கண்காட்சி ஜனவரி 8ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக பபாசி அறிவித்துள்ளது. சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களிடம் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்க (பபாசி) தலைவர் சண்முகம், செயலாளர், வைரவன் ஆகியோர் கூட்டாக கூறியதாவது: சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 49வது புத்தக கண்காட்சி ஜனவரி 8ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த புத்தக கண்காட்சி ஜன.8ம் தேதி முதல் ஜன.21ம் தேதி வரை 14 நாட்களுக்கு நடத்த உள்ளோம். இந்த கண்காட்சி தினசரி காலை 11 முதல் இரவு 8.30 மணி நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் கலைஞர் பொற்கிழி விருது மற்றும் ஒரு லட்சம் ரொக்கம் இந்த ஆண்டும் 6 பேருக்கு வழங்கப்பட உள்ளது.
அடுத்த ஆண்டு புத்தக திருவிழாவில் 1000 அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு விதமான புதிய புத்தகங்கள் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாசகர்களுக்கான பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, மாற்று திறனாளிகளுக்கு வசதிகள் மேம்படுத்த திட்டமிட்டு வருகிறோம். இந்த புத்தக திருவிழாவில் கடந்த முறையை விட இந்த முறை 2 மடங்கு வாசகர்கள் வருகை அதிகரிக்கவும் முயற்சி செய்து வருகிறோம். புதிய படைப்புகளை கொண்டு வரும் முயற்சியில் எல்லா பதிப்பகங்களும் முயற்சி செய்து வருகின்றனர். மாணவர்களுக்கு கதை சொல்லுதல், எழுதுதல், வார்த்தை விளையாட்டு போன்றவற்றை இந்த முறை புதிதாக ஏற்பாடு செய்துள்ளோம்.
புத்தக திருவிழாவில் வாசகர்களுக்கு நுழைவு கட்டணம் 10 ரூபாய் என்று இருந்ததை மாற்றி இலவச அனுமதி வழங்கவும் திட்டமிட்டு வருகிறோம். புத்தக திருவிழாவின் 14 நாட்களும் சிறந்த பேச்சாளர்கள், நிபுணர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. உலக அளவில் புகழ்பெற்ற பதிப்பகங்களான PENGUIN RANDOM HOUSE INDIA, BRITISH COUNCIL, HARPERCOLLINS PUBLISHERS INDIA, SIMON & SCHUSTER INDIA ஆகிய நிறுவனங்களும் கலந்து கொள்கின்றது.
மலேசியா, சிங்கப்பூரில் இருந்தும் தமிழ் பதிப்பகங்களுக்கு அரங்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. திருநங்கையர்களால் நடத்தப்பட்டு வரும் Queer Publishing House நிறுவனத்திற்கும் பிரத்தியோகமாக அரங்கம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் ஐரோப்பாவில் இருந்தும் தமிழ் புத்தக விற்பனையாளர்கள் இந்த கண்காட்சியில் இடம் பெறஉள்ளனர்.எனதெரிவித்தனர்.
What's Your Reaction?

