ஆய்வு செய்யாமல் காரிலே வலம் வந்தாரா செல்வபெருந்தகை? நாமக்கல்லில் சலசலப்பு

காரை விட்டு இறங்காமலே காரிலேயே வட்டமடித்து வலம் வந்து விட்டு ஆய்வு செய்ததாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்ததாகக் கூறி காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை தலைமையிலான குழு விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது  

Sep 25, 2024 - 14:57
ஆய்வு செய்யாமல் காரிலே வலம் வந்தாரா செல்வபெருந்தகை? நாமக்கல்லில் சலசலப்பு

நாமக்கல் நகரில் கடந்த சில ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், புறநகர்ப் பகுதியான முதலைப்பட்டியில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இங்கு,  50 பேருந்து நிறுத்துங்கள், 57 கடைகள், இரண்டு உணவகங்கள், 3 பயணியர் காத்திருக்கும் பகுதி, இரண்டு ஏடிஎம் மையம், 3 கழிவறைகள், 200 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி கொண்ட பார்க்கிங், பொருள் வைப்பறை என பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. தற்போது திறப்பு விழாவிற்கு தயாராகி வரும் இந்த பேருந்து நிலையத்தை, சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவரும் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை தலைமையிலான குழு ஆய்வு செய்தனர். 

அப்போது பேசிய, செல்வ பெருந்தகை, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் உள்ள ஆரியூர் நாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டதாகவும் தரமான உணவு பொருட்கள் கொண்டு இந்த காலை உணவு தயார் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். 

மேலும் கொல்லிமலை வளப்பூர் நாடு பகுதியில் சுமார் 338 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீர்மின் திட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 20 கிலோ வாட் மின் உற்பத்தி நிலையம் அடுத்தாண்டு அக்டோபர் மாதத்தில்  பயன்பாட்டிற்கு வரும், நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் அனைத்து பணிகளும் முடிவுற்ற நிலையில், அடுத்த வாரம் திறக்கப்படும் என செல்வ பெருந்தகை தெரிவித்தார். 

முன்னதாக, நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தை ஆய்வு செய்ய வந்த சட்டமன்ற பொது கணக்கு குழுவினரும் மாவட்ட ஆட்சியரும் பேருந்து நிலையத்தில் காரை விட்டு இறங்காமலே காரிலேயே வட்டமடித்து வலம் வந்துவிட்டு ஆய்வு செய்ததாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து விட்டு சென்றதாக கூறி செல்வபெருந்தகை கடுமையாக விமர்சிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow