பிடிஆர் மாற்றப்பட்டது ஏன் என்று எல்லாருக்கும் தெரியும்! திமுக முழுவதும் ஊழல் ராஜாக்கள் - எல்.முருகன் காட்டம்

திமுகவைப் புறக்கணிக்க மொத்த தமிழ்நாடும் தயாராக உள்ளது

Feb 24, 2024 - 08:00
பிடிஆர் மாற்றப்பட்டது ஏன் என்று எல்லாருக்கும் தெரியும்! திமுக முழுவதும் ஊழல் ராஜாக்கள் - எல்.முருகன் காட்டம்

பழநி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திமுக எம்.பி ஆ.ராசாவை நீலகிரி மக்கள் புறக்கணிக்க தயாராக இருப்பதாகவும், திமுக முழுவதும் ஊழல் ராஜாக்களாக உள்ளதாகவும் விமர்சித்தார். 

திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வருகை தந்தார். ரோப் கார் வழியாக மலைக் கோவிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டார். அதன் பின் பொதுமக்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடி 3-வது முறையாக 400 இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் பிரதமர் ஆவார் என்று கூறினார். மேலும், நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் எல்.முருகன் போட்டியிட்டால் தோல்வி அடைவார் என்ற திமுக எம்.பி ஆ.ராசாவின் விமர்சனத்திற்கு மறுப்பு தெரிவித்தார். திமுகவில்தான் பொறுப்பாளர்களே அந்தந்தத் தொகுதி எம்.பி, எம்.எல்.ஏக்கள் என்று முடிவு செய்து கொள்வார்கள் என்றும், பாஜகவில் நாடாளுமன்ற குழு பரிந்துரைக்கும் நபர்களே வேட்பாளர்கள் ஆவார்கள் என்றும் கூறிய அவர், அப்படித்தான் தாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆ.ராசா ஊழல்வாதி என்று மக்களுக்குத் தெரியும் என்றார். நீலகிரியில் ஆ.ராசாவை புறக்கணிக்க மக்கள் தயாராகி விட்டார்கள் என்றும் கூறிய அவர், தேர்தல் வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றாமல் உள்ள திமுகவைப் புறக்கணிக்க மொத்த தமிழ்நாடும் தயாராக உள்ளதாகவும் கூறினார். டாஸ்மாக்கை மூடுவதாகச் சொன்னது, கல்விக்கடன் பற்றிய வாக்குறுதி போன்றவை என்ன ஆனது என்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பினார்.

திமுக குடும்பம் அடித்த ரூ.30,000 கோடி கொள்ளையை வெளியிட்டதற்காகத்தான் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நிதியமைச்சர் பதவியில் இருந்து தூக்கப்பட்டார் என்றும் விமர்சித்த அவர், இது மக்களுக்கே தெரியும் என்றும் கூறினார். மேலும், திமுக என்பது மன்னர் ஆட்சி போலவும், அதில் இருப்பவர்கள் எல்லாம் ஊழல் ராஜாக்களாக இருக்கிறார்கள் என்றும் விமர்சித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow