நல்ல காலம் பொறக்குது.. சென்னையில் ஜில்லென பெய்த மழை.. குடுகுடுப்பை காரராக மாறிய வெதர்மேன்
சென்னையில் சுட்டெரித்த வெயிலுக்கு இதமாக கோடை மழை பெய்து குளிர்வித்துள்ளது. கடந்த 4 மாத காலமாக புழுக்கத்தில் சிக்கித்தவித்த மக்களின் மனங்களை குளிர்வித்துள்ளது பெய்யென பெய்த மழை.
சென்னையில் கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் பெய்த தொடர் கனமழையால் பெருவெள்ளம் சூழ்ந்தது. பின்னர் படிப்படியாக வெள்ளம் வடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். ஜனவரி மாதத்திற்குப் பிறகு மழையே இல்லை. பிப்ரவரியில் இருந்தே வெயில் காலம் ஆரம்பித்து விட்டது.
மார்ச் மாதத்தில் கத்திரி வெயில் காலம் போல வெயில் சுட்டெரித்தது. எப்போது கோடை மழை பெய்யும் என்று சென்னைவாசிகள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். பல ஊர்களில் கோடை மழை பெய்தாலும் சென்னையில் மழைக்கு வாய்ப்பே இல்லை என்று வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரனும் கடந்த வாரம் கூறவே மக்களின் மனங்களில் ஒருவித வெறுமை பரவியது. எப்போது மழையை பார்ப்போம் என்று ஏங்கத் தொடங்கியிருந்தனர்.
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கோடை மழை கொட்டியது. பல ஊர்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. அதனை பலரும் ஸ்டேட்டஸ் ஆக வைத்து மகிழ்ந்தனர். அதைப்பார்த்த ஒரு சென்னைவாசியோ தனது முகநூல் பக்கத்தில் அண்ணாமலை பாணியில் சவால் விட்டார்.
டேய்... அசோக்கு உங்க ஊர்ல ஆலங்கட்டி மழை பெய்யுதுன்னா... படமெடுத்து ஸ்டேடஸ் போடுற... இப்ப நான் சொல்றத... உன்னோட அந்த ஓட்ட ஆண்ட்ராயிட்ல சேவ் பண்ணி வச்சுக்க... உன் ஊர்ல பெஞ்சது மாதிரியே என்னைக்காவது ஒரு நாள் மொட்ட வெயிலடிக்கிற எங்க மெட்ராசுலயும் மழை அடிச்சி ஊத்தும்... அதுல நா நனைஞ்சி ஜலுப்பு பிடிச்சி... டாக்டர்ட்ட போயி... பிளட் டெஸ்ட்,யூரின் டெஸ்ட்,சுகர் டெஸ்ட்,தைராய்ட் டெஸ்டெல்லாம் எடுத்து... எங்க ஊர்லயும் மழை பெஞ்சதுன்னு ஃபுரூப்போட ஸ்டேடஸ் போடல...எம் பேரு அண்ணாமழை இல்லடா... அண்ணா வெயிலுடா...! என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு அனைவராலும் ரசிக்கப்பட்டது.
அவரது பதிவு அந்த வருணபகவானுக்கே கேட்டிருக்கும் போல பூமி குளிர சென்னையில் மழை பெய்தது. இன்று அதிகாலை கிண்டி கோட்டம் கிண்டி, மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம், ஆலந்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் மழை பெய்தது. இதன் காரணமாக புழுக்கம் மறைந்து குளுமை பரவியது.
சென்னையில் இனி வெயில் மறைந்து மழை நீடிக்கும் என்று குடுகுடுப்பைகாரர் போல போஸ்ட் போட்டிருக்கிறார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான். அவர் தனது பதிவில் " ஜெய் ஜக்கம்மா.. நல்ல காலம் பிறக்குது.. பீக் சம்மர்ல வெயில் குறையப்போகுது.. தமிழ்நாட்ல நல்ல மழை வரப்போகுது"என்று பதிவிட்டுள்ளார் பிரதீப் ஜான். அக்னி நட்சத்திர காலத்தில் அடை மழை பெய்தால் ஆனந்தம்தான் என்று மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
What's Your Reaction?