ஈரோடு மாவட்டத்தில் 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை - மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்...
ஈரோடு மாவட்டத்தில் 191 பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜகோபால் சுங்கரா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, அதற்கான முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ஈரோடு மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கையாளும் முறைகள், பேலட் யூனிட், வி.வி.பேட் ஆகியவற்றை பரிசோதிக்கும் முறைகள், பழுது ஏற்படும் போது அவற்றை கையாளும் விதம் குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்தப் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மாவட்டம் முழுவதும் 8 இடங்களில் நடைபெறும் இரண்டாம் கட்ட பயிற்சியில் 10,413 பேர் பயிற்சி பெறுகின்றனர். பயிற்சி மட்டும் இல்லாமல் தபால் வாக்கு செலுத்தும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள், தபால் வாக்கு செலுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்று கூறினார்.
மேலும், “85 வயது முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து படிவம் 12D முலம் வாக்களிக்கும் வசதி ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் தொடங்கியது. இதில் நேற்று (ஏப்ரல் 6) மாலை வரை 2840 பேர் தங்கள் வாக்குகளை வீட்டிலிருந்து செலுத்தியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.4.47 கோடி உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2.26 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.2.21 கோடி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர், “ஈரோடு மாவட்டத்தில் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் 55 புகார்களும், சி.விஜில் ஆப் மூலம் 34 புகார்களும் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 191 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நாளன்று 1125 வாக்குச்சாவடிகளில் வெப்காஸ்டிங் செய்யப்படவுள்ளது” என்று கூறினார்.
What's Your Reaction?