நீட் தேர்வர்களுக்கான ஆடை கட்டுப்பாடு.. அதிரடியாக உத்தரவிட்ட நீதிமன்றம்...

May 1, 2024 - 21:56
நீட் தேர்வர்களுக்கான ஆடை கட்டுப்பாடு.. அதிரடியாக உத்தரவிட்ட நீதிமன்றம்...

நீட் தேர்வின்போது டயப்பர் அணிந்து பங்கேற்கவும் அடிக்கடி கழிவறை சென்று டயப்பர்  மாற்ற அனுமதிக்க வேண்டும் எனவும் மாணவி ஒருவர் தொடர்ந்த வழக்கில் தேசிய தேர்வு மையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 

இந்த நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள 19 வயது மாணவி ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்த மனுவில், "4 வயதில் தீ விபத்தில் சிக்கியதால் சிறுநீரை கட்டுப்படுத்த முடியாத பாதிப்புக்கு ஆளாகியுள்ளேன். இதனால் டயப்பர் அணிந்திருக்க வேண்டும் எனவும் அடிக்கடி டயப்பர் மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்கள்  அறிவுறுத்தியுள்ளனர். எனவே நீட் தேர்வின் போது  டயப்பர் அணிந்திருக்கவும் தேவைப்படும் போது டயப்பரை மாற்றிக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்" எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று (மே -1) விசாரணைக்கு வந்தது.  அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "நீட் தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் கடுமையான சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். சில நேரங்களில் வரம்பற்ற சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். நீட் தேர்வு எழுதுவோரின் ஆடை கட்டுப்பாட்டில் மனுதாரர் சந்திக்கும் பிரச்னை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. மனுதாரர் எப்போதும் டயப்பர் அணிந்திருக்க வேண்டும். அதை அடிக்கடி மாற்றிக்கொள்ள வேண்டும். இதனால் அவர் கழிப்பறைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். இந்த சலுகை மறுக்கப்பட்டால் அவரால் நீட் தேர்வு எழுத முடியாமல் போகும். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான பாகுபாட்டுக்கு வழிவகுக்கும்" என கூறியுள்ளார். 

மேலும், "நீட் தேர்வர்களுக்கான ஆடை கட்டுப்பாட்டில் மாணவிகள் சானிட்டரி நாப்கின் அணிந்திருக்க அனுமதி வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அது இல்லாத காரணத்தால் மனுதாரர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதை கருத்தில் கொண்டு நீட் தேர்வு மையங்களில் மாணவிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்" எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

இதையடுத்து மாணவியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரது கோரிக்கையை தேசிய தேர்வு முகமை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தது. இதுதொடர்பாக தேர்வு மைய அதிகாரிக்கு  உரிய உத்தரவு பிறப்பிப்பதாக உறுதியளித்த நிலையில் வழக்கை முடித்து வைத்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow