லட்டு விலை உயர்வா? ரூ.300 தரிசன டிக்கெட் விலையில் மாற்றமா?.. திருப்பதி திருமலை தேவஸ்தானம் சொல்வதென்ன?

திருமலை ஏழுமலையான் கோவிலில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் லட்டு விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதனை பலரும் உண்மை என நம்பி குழப்பம் அடைந்துள்ளனர். ஆனால் இவை போலியான தகவல்கள் என்றும் இது போன்ற செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Jun 24, 2024 - 14:30
லட்டு விலை உயர்வா? ரூ.300 தரிசன டிக்கெட் விலையில் மாற்றமா?.. திருப்பதி திருமலை தேவஸ்தானம் சொல்வதென்ன?

திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலை சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். இலவச தரிசனம் செல்லும் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து சில நிமிடங்கள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும். விஐபி பிரேக் தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் பொறுமையாக கண் குளிர ஏழுமலையானை கும்பிட்டு விட்டு வருவார்கள். 

விரைவு தரிசனம், ஆர்ஜித சேவைகளில் ஏழுமலையானை தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இணையதளத்தில் சென்று மூன்று மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதமும் 23ஆம் தேதி தேவஸ்தான நிர்வாகம் சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவுகளை நடத்துகிறது.செப்டம்பர் மாத தரிசன டிக்கெட்டுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிலீஸ் செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்து விட்டது.ரூ.300 தரிசன டிக்கெட் மூலம் முன்பதிவு செய்து, தரிசனம் பெறும் பக்தர்களுக்கு 2 லட்டுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. கூடுதல் லட்டு வேண்டும் என்கிறவர்கள் லட்டு கவுன்டரில் நேரில் சென்று, ரூ.50 செலுத்தி லட்டுக்களை பெற்றுக் கொள்ளலாம். இந்த முறையே தற்போது வரை வழக்கத்தில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் திருப்பதியில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் விலை ரூ.200 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும், அதே போல் லட்டு பிரசாத விலையும் ரூ.50 லிருந்து ரூ.25 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளதாக வாட்ஸ்ஆப் குழுக்கள் சிலவற்றிலும், சமூக வலைதளங்களிலும் பலவிதமான செய்திகள் பரவி வருகிறது. இன்னும் சில இணையதளங்களில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் லட்டு விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. இதனை பலரும் உண்மை என நம்பி குழப்பம் அடைந்துள்ளனர். ஆனால் இவை போலிசான தகவல்கள் என்றும், இது போன்ற செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

சில புரோக்கர்கள், சுற்றுலாத்துறையின் இணையதளங்களை பயன்படுத்தி, அதன் மூலம் டிக்கெட் பெற்று தருவதாக ஏமாற்றி, பக்தர்களிடம் அதிக கட்டணம் வசூலித்து வருவதாக தெரிய வந்துள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபட்டு, அப்பாவி பக்தர்களை ஏமாற்றும் புரோக்கர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான நிர்வாகம் எச்சரித்துள்ளது. இது போன்ற போலியான நபர்களையும், தகவல்களையும் நம்ப வேண்டாம் என்றும் தேவஸ்தான நிர்வாகம் பக்தர்களை கேட்டுக் கொண்டுள்ளது.


இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் லட்டு பிரசாத விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. https://ttdevasthanams. ap.gov.in என்ற தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே பக்தர்கள் தங்களின் தரிசன டிக்கெட்களை முன்பதிவு செய்யும் படி கேட்டுக் கொள்கிறோம். 

பல்வேறு மாநில சுற்றுலாத் துறைக்காக குறிப்பிட்ட அளவிலான தரிசன டிக்கெட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாநில சுற்றுலாத் துறையின் தரிசன பேக்கேஜ் டிக்கெட்களை பயன்படுத்தி திருமலை திருப்பதி தரிசனம் பெற விரும்பும் பக்தர்கள், அந்த மாநிலத்தின் சுற்றுலா துறை இணையதளம் வழியாக தரிசன மற்றும் பயண டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow