பாவாக்காய் மண்டபம் வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர்.. பக்தர்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்கள்.. மதுரையில் நெகிழ்ச்சி

சித்திரை திருவிழாவின் நான்காம் நாளன்று வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருளினார். மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் குளிர்பானங்கள் வழங்கி தாகம் தீர்த்த சம்பவமானது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Apr 16, 2024 - 15:47
பாவாக்காய் மண்டபம் வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர்.. பக்தர்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்கள்.. மதுரையில் நெகிழ்ச்சி

மதுரை உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நாள்தோறும் அம்மனும் சுவாமியும் மாசி வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். அப்போது ஏராளமான பக்தர்கள் மீனாட்சி அம்மன் வேடம் அணிந்தும் கருப்புசாமி வேடம் அணிந்தும் ஊர்வலத்தின் வந்தனர். 

இந்த நிலையில் 4 ஆம் நிகழ்வாக சுவாமியும் அம்மனும் வில்லாபுரம் பகுதியில் உள்ள பாவாக்காய் மண்டகப்படியில் இருந்து மாலை புறப்பட்டு கோவிலுக்கு வருகை தந்தனர். மதுரை தெற்கு வாசல் பகுதியில் சுவாமியும் அம்மனும் வீதி உலா சென்றபோது  சாமி தரிசனம் செய்ய வருகை தரக்கூடிய பக்தர்களின் கலைப்பை போக்கும் வகையில் மத நல்லிணக்கத்தோடு மதுரை தெற்குவாசல் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் சார்பில் பக்தர்களுக்கு ரோஸ் மில்க் உள்ளிட்ட குளிர்பானங்களை இஸ்லாமியர்கள் வழங்கினர்.

சித்திரை திருவிழாவின் போது சுவாமியும் அம்மனும் தங்க பல்லாக்கில் வில்லாபுரத்திற்கு வந்து எழுந்தருளுவது ஏன் என்பதற்கு ஒரு காரணம் உண்டு. மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அழகப்ப பிள்ளை, தானப்ப பிள்ளை ஆகியோர் எத்தனையோ கைங்கர்யங்களை செய்துள்ளனர். இவர்கள் மீனாட்சி கோயிலுக்கு செய்த சேவைகளை கண்டு வியந்த பாண்டிய சேனாதிபதி, அவர்களது வேண்டுகோள் கேட்டார். தங்கள் ஊருக்கு அம்மையும் அப்பனும் ஒருநாள் வந்து தங்கி அருளவேண்டும் என அவர்கள் பதிலுரைத்தனர். அன்றுமுதல் இந்த நான்காம் நாள் மண்டகப்படி சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

வில்வமரங்கள் நிறைந்த ஊர் என்பதால் வில்வபுரம் என்று அழைக்கப்பட்ட ஊர் தற்போது வில்லாபுரம் என வழங்குகின்றனர். மக்கள் பாவங்களை காய்த்து போக்கச் செய்வதால் மண்டபத்துக்குப் பெயர் பாவக்காய் மண்டபம். பாவக்காய்கள் நிவேதனமாக இறைவனுக்கு மக்கள் அளித்து வந்ததால் இந்தப் பெயரானது என்றும் கூறுகின்றனர். 

மதுரை தெற்குவாசலை அடுத்த வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படிக்கு இறைவனும் இறைவியும் பல்லக்கில் காலையில் வந்து தங்குவது வழக்கமாயிற்று. மீண்டும் மாலை புறப்பட்டு இரவு கோயிலை அடைவர். அன்றைய தினம் மாசிவீதி சுற்றுவதில்லை. சின்னக்கடைத்தெரு வழியாகவே சென்று வருவர். நேற்றைய தினம் நான்காம் நாள் வில்லாபுரம் சுவாமி மண்டகப்படி முழுக்க சுற்றுவட்டார பக்தர்கள் வந்து கூடிநின்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து சின்ன கடை வீதி, தெற்கு வாசல் வழியாக நடைபெற்ற வீதியுலா, இறுதியாக கோயிலை சென்றடைந்தது.

வீதி உலாவின் போது பல்வேறு பகுதிகளிலும் பக்தர்களின் தாகம் தீர்ப்பதற்காகவும் ஏராளமானோர் குடிநீர் பந்தல்களை அமைத்தும் அன்னதானமாக பிரசாதங்களை வழங்கியும் வருகின்றனர் பக்தர்களின் தாகத்தை போக்கும் வகையில் மத நல்லிணக்கத்தோடு மதுரை தெற்குவாசல் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் சார்பில் பக்தர்களுக்கு ரோஸ் மில்க் கொடுத்தனர். பல ஆண்டுகளாக சித்திரை திருவிழா 4ஆம் நாள் நிகழ்வின் போது  மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்ய வில்லாபுரம் வரும் பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் குளிர்பானங்கள் வழங்கி தாகம் தீர்த்து வருகின்றனர். 

ஆண்டுதோறும் இது போன்ற சித்திரை திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் நீண்ட தூரம் நடந்து வரும்போது களைப்போடு இருப்பார்கள் என்பதால் இதுபோன்று பக்தர்களின் களைப்பை போக்கும் வகையில் குளிர்பானங்கள் வழங்கி வருகிறோம் வேற்றுமையின்றி ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதற்கு இதுபோன்ற பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம் என தெற்கு வாசல் ஜமாத் தலைவர் தெரிவித்தார்.

 மதுரையில் கொண்டாடப்படும் சித்திரைத் திருவிழா என்பது மதங்கள் கடந்த வேற்றுமையின்றி ஒற்றுமையை ஓங்கிசொல்லும் விழாவாக கொண்டாடப்படுவதற்கு இது சாட்சியாக அமைந்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow