வாக்குப்பதிவை நிறுத்த முயன்ற நா.த.கவினர்.. 10 பேர் மீது வழக்குப்பதிவு!
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவின் போது போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் கார்த்திகேயன் உள்பட 10 பேர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 19-ம் தேதி நடந்த மக்களவை தேர்தல் வாக்குப்பதிவின் போது, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள, 165-வது வாக்குச்சாவடி மையத்தில், நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது.
இதனால் உடனடியாக நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடிக்கு சென்று பார்வையிட்டு, வாக்குப்பதிவை நிறுத்தும்படி வலியுறுத்தினார். ஆனால் அதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததால், வாக்குப்பதிவு மையத்தின் வெளியே வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் உடனடியாக அங்கு வந்த திருவல்லிக்கேணி போலீசார் அவர்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்து பின்னர் விடுதலை செய்தனர்.
இந்நிலையில், சட்டவிரோதமாக கூடுதல், தேர்தல் நடத்தை விதிமீறல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நாம் தமிழர் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?