சங்கரன்கோவில் அருகே கார் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 3 பேருக்கு தீவிர சிகிச்சை!
சங்கரன்கோவில் அருகே சாலை ஓரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மின்கம்பத்தை இடித்து தள்ளி விட்டு மோதிய விபத்தில் ஒருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில், 3 பேர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் முதல் புளியங்குடி செல்லும் சாலையில் உள்ள நகரம் என்ற கிராமத்தின் அருகே சாலை ஓரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது குற்றாலம் சென்று விட்டு அதிவேகமாக சங்கரன்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்த கார் சாலை ஓரம் இருந்த மின்கம்பத்தை இடித்து தள்ளிவிட்டு சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் மருதுபாண்டி(48) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் மூன்று பேர் பலத்த காயங்களுடன் மூன்று ஆம்புலன்ஸ்களில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது விபத்தில் சிக்கியவர்களின் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
காரில் பயணம் செய்த அனைவரரையும் காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுகா காவல்துறையினர் ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு சாலையோரம் ஒடிந்து கிடந்த மின்கம்பத்தையும் அப்புறப்படுத்தினர் தொடர்ந்து காரையும் காருக்கு அடியில் சிக்கி இருந்த இருசக்கர வாகனத்தையும் ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு காவல்துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
பொதுவாக சொகுசு காரில் குற்றாலத்துக்கு வரந்து விட்டு திரும்பி செல்லும் சுற்றுலா பயணிகளின் சொகுசு காரை காவல்துறையினர் சோதனை செய்ய வேண்டும் அவ்வாறு சோதனை செய்யாததால் அப்பாவி பொதுமக்கள் கார் விபத்தினால் இறந்து வருவது தொடர் கதையாகி வருகிறது.
எனவே காவல்துறையினர் இருசக்கர வாகனத்தை மது அருந்திவிட்டு ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போல் சொகுசு காரில் குற்றாலம் தென்காசியில் இருந்து திரும்பி செல்லும் வாகனங்களை ஓட்டுனர்கள் மது போதையில் இருக்கிறார்களா என சோதனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
அதனால் குற்றாலம் சீசன் தொடங்கும் போதெல்லாம் சொகுசு கார் விபத்து ஏற்படுவதை தடுக்கலாம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
What's Your Reaction?






