திருமாவளவன் தான் இன்ஸ்பிரேஷன்... ‘மாமன்னன்’ மாரிசெல்வராஜ் ஓபன்

திருமாவளவன் தான் தனது அறிவுத் தந்தை என பெருமிதமாக கூறியுள்ளார். தற்போதைய சமூகத்தின் உளவியல் பற்றி தெரிந்துகொள்ள திருவமாவளவின் வீடியோ உதவும் என மாரி செல்வராஜ் பேசியுள்ளார்.

Feb 29, 2024 - 15:30
Feb 29, 2024 - 16:18
திருமாவளவன் தான் இன்ஸ்பிரேஷன்... ‘மாமன்னன்’ மாரிசெல்வராஜ் ஓபன்

பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். தொடர்ந்து கர்ணன், மாமன்னன் என மொத்தம் 3 படங்கள் இயக்கியுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மூன்று படங்களுமே ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன. இதனையடுத்து விரைவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தையும் இயக்கவுள்ளார் மாரி செல்வராஜ். இந்நிலையில் தனக்கு திருமாவளவன் தான் இன்ஸ்பிரேஷன் என்பதாக மாரி செல்வராஜ் பேசியது வைரலாகி வருகிறது. 

விடுதலை சிறுத்தை கட்சியின் விடுதலை கலை இலக்கியப் பேரவை இளவந்திகை என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இதில், விசிக தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு எழுச்சித் தமிழர் இலக்கிய விருதுகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாமன்னன் படத்துக்காக இயக்குநர் மாரி செல்வராஜ்ஜுக்கு எழுச்சித் தமிழர் இலக்கிய விருது வழங்கப்பட்டது. அதன் பின்னர் பேசிய மாரி செல்வராஜ், திருமாவளவன் பற்றி பெருமிதமாக பேசியிருந்தார்.  

“சினிமா இயக்கத் தொடங்கியதில் இருந்து புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. இதனால் இந்த சமூகம் என்ன மாதிரியான உளவியலில் வாழ்கிறது என்பதை திருமாவளவன் பேசும் வீடியோக்களை பார்த்தால் புரிந்துகொள்ள முடியும். பரபரப்புக்காக தயார்படுத்திக் கொள்ளாமல் தன்னை நோக்கி வரும் அத்தனை அவதூறுகளையும் பரபரப்புகளையும் நிதானமாக நின்று சமாளித்து அதனை அடுத்த தலைமுறைக்கு கற்றுக் கொடுப்பது தான் ஒரு தலைவன் கொடுக்கும் நம்பிக்கை.”

”அப்படியான நம்பிக்கையை திருமாவளவன் செய்து கொண்டிருக்கிறார். அவர் தனது 3 படங்களையும் பார்த்துவிட்டு போனில் பேசியதுடன், என்னைப் பற்றிய சர்ச்சைகள் பற்றி செய்திகள் வந்தால் அதனையும் விசாரிப்பார். என்னை சுற்றி என்ன மாதிரியான அரசியல் போய்க் கொண்டிருக்கிறது என என் அப்பாவுக்கு தெரியாது. ஆனால் திருமாவளவன் எனது அப்பாவின் ஸ்தானத்தில் இருந்து பேசுபவர், என்னுடைய அறிவுத் தந்தையே அவர் தான். எப்படிப்பட்ட சூழலில் இருந்து நான் வந்தேன் என்று அனைவருக்கும் தெரியும்.” 

எல்லா வாய்ப்புகளும் இருந்தும் கலைதான் முக்கிய ஆயுதம் என்ற உறுதியோடு நான் இருக்க காரணம் எனக்கு முன்னாடி திருமாவளவன் இருப்பது தான் என மாரி செல்வராஜ் கூறினார். திருமாவளவனை தனக்கு முன்னோடி என குறிப்பிட்டு மாரி செல்வராஜ் பேசியது திரையுலகில் பரபரப்பாக காணப்படுகிறது.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow