வயலில் தேங்கிய மழைநீரை அகற்றிய விவசாயிக்கு நேர்ந்த சோகம்- நிவாரணம் வழங்கி அமைச்சர்

அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆகியோர் கனகராஜின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஆறுதல் கூறியதுடன் நிவாரணம் வழங்கினர்

Nov 16, 2023 - 12:09
வயலில் தேங்கிய மழைநீரை அகற்றிய விவசாயிக்கு நேர்ந்த சோகம்- நிவாரணம் வழங்கி அமைச்சர்

சீர்காழி அருகே வயலில் தேங்கிய மழை நீரை வெளியேற்றிய போது சேற்றில் சிக்கி விவசாயி ஒருவர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள காத்திருப்பு கிராமத்தைச்சேர்ந்தவர் கனகராஜ் (50).இவர் அதே பகுதியிலுள்ள ஒருவரது வயலில் விவசாய கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

சீர்காழி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் வயல்வெளிகள் முழுவதும் மழைநீர் தேங்கி கடல் போல் காட்சியளிக்கின்றது. இந்நிலையில் நேற்று காலை வயலில் தேங்கியிருந்த மழை நீரை வெளியேற்று பணியில் கனகராஜ் ஈடுபட்டிருந்தார்.அப்போது எதிர்பாரதவிதமாக சேற்றில் சிக்கி கால் வழுக்கி தேங்கிருந்த தண்ணீருக்குள் விழுந்துள்ளார்.பலத்த அடிப்பட்ட நிலையில் அவரால் சேற்றிலிருந்து எழ முடியாமல்லும், காப்பாற்ற ஆளில்லாமலும் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார்.

அந்த வழியே வயலுக்கு சென்றவர்கள் கனகராஜ் இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து பாகசாலை போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கனகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததோடு, தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

சேற்றில் சிக்கி உயிரிழந்த கனகராஜுக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கனகராஜின் வீட்டுக்கு சென்ற அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆகியோர் கனகராஜின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஆறுதல் கூறியதுடன் நிவாரணமாக 1 இலட்ச  ரூபாய் காசோலையை வழங்கினார்.

-ஆர்.விவேக் ஆனந்தன்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow