எண்ணெய் கசிவுக்கு சிபிசிஎல் நிறுவனமே காரணம் -மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
முழுமையான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவு
எண்ணூர் மணலி பகுதியில் சிபிசிஎல் நிறுவனம் அதிகப்படியான எண்ணெயை தேக்கி வைத்ததே எண்ணெய் கசிவுக்கு காரணம் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை மணலி, எண்ணூர் பகுதிகளில் வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரம் தொடர்பாக வெளியான வீடியோவின் அடிப்படையில், டிசம்பர் 7ஆம் தேதி தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வில் இன்று (டிச.09) விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கில், ஐந்து கிலோமீட்டர் சுற்றளவிற்கு எண்ணெய் படலங்கள் பரவியுள்ள நிலையில், அதை எப்படி தடயம் அடையாளம் காண முடியிவில்லை என மாசுக்கட்டைப்பாட்டை வாரியம் தெரிவித்ததை தீர்ப்பாயம் ஏற்கவில்லை. மேலும், அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எவ்வளவு எண்ணெய் கசிவு சேகரிக்கபட்டுள்ளது? எண்ணெய் பரவலை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? உண்மை நிலையை அறிய தமிழக அரசு ஏன் இன்னும் நிபுணர் குழுவை அமைக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
சென்னை பெட்ரோலிய கழகத்தின் தரப்பில், சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து எந்த ஒரு கசிவும் ஏற்படவில்லை எனவும், அப்பகுதியில் 25 ரசாயன ஆலைகள் இயங்கி வருவதால், எண்ணெய் கசிவிற்கு சென்னை பெட்ரோலிய கழகம் மட்டும் காரணமல்ல. இதுபோன்ற நிகழ்வுகளை தடுப்பதற்கு தேவையான நடைமுறைகள், ஏற்கனவே அமலில் உள்ளதாக குறிப்பிடப்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை செயலாளர், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர், நீர்வள ஆதாரத்துறையின் தலைமை பொறியாளர் சென்னை மண்டலம், தமிழ்நாடு மீன் வளத்துறை இயக்குனர், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் அடங்கிய குழுவை அமைத்த தீர்ப்பாயம், டிசம்பர் 11ம் தேதி நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (டிச 12) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாசுக்கட்டைப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த இடைக்கால அறிக்கையில், சிபிசிஎல் நிறுவனம் அதிகப்படியான எண்ணெயை தேக்கி வைத்ததே எண்ணெய் கசிவுக்கு காரணம் என தெரிவுத்துள்ளது. இந்த எண்ணெய் கசிவு, டிசம்பர் 3ம் தேதி முதல் 5ம் தேதிக்குள் ஏற்பட்டிருக்கலாம் எனவும், கசிவு ஏற்பட்டதை சிபிசிஎல் நிறுவனம் உடனடியாக சரி செய்யாததே பாதிப்புக்கு காரணம் எனவும் கூறப்பட்டது.
சிபிசிஎல் நிறுவனம் சார்பில், மாசுக்கட்டு வாரியம் அறிக்கை அரைகுறையாக உள்ளது. முதலில் டிசம்பர் 7ம் தேதி எண்ணெய் கசிவு ஏற்பட்டதாகவும், தற்போது,டிச 03ம் தேதி ஏற்பட்டதாக மாறுபட்ட தகவலை தீர்ப்பாயத்தில் தெரிவிக்கிறது. எண்ணெய் கசிவுக்கு சிபிசிஎல் நிறுவனம் காரணம் இல்லை என தெரிவித்தார். இதையடுத்து, முழுமையான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்ட தீர்ப்பாயம் விசாரணையை தள்ளி வைத்தது.
What's Your Reaction?