முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான சாந்தன் காலமானார்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான சாந்தனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 7.50 மணிக்கு உயிரிழந்தார்.
1991 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்காக தமிழ்நாடு வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரில் சாந்தனும் ஒருவர். சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இதன் பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த 7 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். சாந்தன் இலங்கை தமிழர் என்பதால், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டார். அங்கு, தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் எனக் கோரி வந்த சாந்தனை, இலங்கை அனுப்பி வைக்க மத்திய அரசும் சம்மதித்தது.
ஆனால், சாந்தனுக்கு கடந்த ஜனவரி 24-ம் தேதி திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. தீவிர சிகிச்சை அளித்து வந்த போதும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்ததாக, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க :
https://kumudam.com/Will-Senthilbalaji-come-out-Judgment-in-bail-case-today
What's Your Reaction?