Nadigar Sangam: மீண்டும் தொடங்கிய நடிகர் சங்க கட்டட பணிகள்… இந்தாண்டு இறுதிக்குள் நல்ல செய்தி வருமா?

தமிழ்த் திரையுலகில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் நடிகர் சங்க கட்டட பணிகள் இன்று முதல் மீண்டும் தொடங்கியது.

Apr 22, 2024 - 13:11
Nadigar Sangam: மீண்டும் தொடங்கிய நடிகர் சங்க கட்டட பணிகள்… இந்தாண்டு இறுதிக்குள் நல்ல செய்தி வருமா?

சென்னை: சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக 19 கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தில் ரூ.26 கோடி செலவில் பிரமாண்ட புதிய கட்டடம் கட்ட 2017ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் இதே இடத்தில் தான் எனது திருமணம் நடக்கும் என நடிகர் சங்க செயலாளர் விஷால் கூறியிருந்தார். அப்போது இந்த சபதத்தில் ஆர்யாவையும் சேர்த்திருந்தார் விஷால். ஆனால் ஆர்யாவோ விஷாலை நம்பியிருக்காமல் நடிகை சாயிஷாவை திருமணம் செய்துகொண்டது தனி கதை.   

இதனிடையே நடிகர் சங்கத் தேர்தல், நிர்வாக பிரச்சினை, சட்ட பிரச்னைகள், கொரோனா போன்ற காரணங்களால் சங்க கட்டட பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. நிதி பிரச்சினை காரணமாக 3 ஆண்டுகளாக பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. இதுவரை 20 கோடி அளவுக்கு செலவு செய்யப்பட்ட நிலையில், மேலும் பல கோடிகள் தேவைப்படுகிறது என கூறப்பட்டது. அதேநேரம் நாசர், விஷால், கார்த்தி தலைமையிலான அணி தேர்தலில் வெற்றி பெற்றதும், மீண்டும் கட்டடம் கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சமீபத்தில் நடந்த பொதுக்குழுவிலும் கட்டடம் கட்ட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.  

அதன்படி, இன்னும் 30 கோடி ரூபாய் அளவுக்கு நிதி தேவைப்படுவதாக பொருளாளர் கார்த்தி கூறினார். அதை தெடார்ந்து நடிகர்கள் ரஜினி, கமல், விஜய் ஆகியோர் கட்டட பணிகளுக்கு தலா ஒரு கோடி நிதி கொடுத்தனர், நடிகரும் அமைச்சருமான உதயநிதியும் ஒரு கோடி கொடுத்தார். இந்நிலையில், நடிகர் சங்க கட்டட பணிகள் இன்று மீண்டும் பூஜையுடன் தொடங்கின. தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன், அறங்காவலர் குழு உறுப்பினர் குமாரி சச்சு உட்பட பலர் கலந்துகொண்டனர்.  

இதுகுறித்து நடிகர் சங்க துணைத்தலைவர் பூச்சி முருகன் கூறியதாவது, மீண்டும் கட்டட பணிகள் தொடங்கியுள்ளது என்ற செய்தி, நடிகர் சங்கத்தை சேர்ந்த மூவாயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. முதற்கட்டமாக சங்க சுவர் பணிகளை முடிக்கும் வேலைகளை தொடங்கியுள்ளோம். அமைச்சர் உதயநிதி உட்பட, பல்வேறு தரப்பினர் நிதி அளித்துள்ளனர். இனி சங்க பணிகள் வேகம் எடுக்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் கண்டிப்பாக புதுக்கட்டடம் கட்டி திறப்புவிழா நடத்தப்படும் என்றார்.  

நடிகர் சங்கத்துக்கு அல்லது ஏதாவது ஒரு பகுதிக்கு, நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்ட மறைந்த விஜயகாந்த் பெயர் வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். அது குறித்து பொதுக்குழு, செயற்குழுவில் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று நடிகர் சங்க செயலாளர் விஷால் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நடிகர் சங்க கட்டடத்தில் விஷாலின் திருமணம் நடைபெறுமா என்பதும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow