நாகை எம்.பி செல்வராசு காலமானார்... முதலமைச்சர், இ.கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
நாகை மக்களவை உறுப்பினர் செல்வராசு உடல்நலக் கோளாறு காரணமாக காலமானார். அவருக்கு வயது 67.
நாகப்பட்டினம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எம். செல்வராசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் மாநில நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்தார். திருவாரூர் மாவட்டம் கப்பலுடையான் என்ற ஊரில் பிறந்த செல்வராசு, சிறுவயதிலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். படிப்படியாக கட்சிக்குள் பல பதவி வகித்து வந்தவர், திருவாரூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் துணை செயலாளர், நாகை மாவட்ட செயலாளர் ஆகிய முக்கிய பொறுப்புகளில் நீண்டகாலம் இருந்தார்.
நாகை எம்.பியாக 4 முறை பணியாற்றினார் :
1989-ம் ஆண்டு நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் பேட்டியிட்டு வெற்றி பெற்று முதன் முறையாக மக்களவைக்கு சென்றவர், தொடர்ந்து 1996, 1998, 2019 ஆகிய ஆண்டுகளிலும் நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சிறுநீரக பாதிப்பால் காலமானார் :
இந்நிலையில், சிறுநீரக கோளாறால் செல்வராசு பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக, மாற்று சிறுநீரகம் பொருத்திக் கொண்டார். அதன் பின் அடிக்கடி உடல்நலக் கோளாறு ஏற்பட்டுவந்த நிலையில், சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் இன்று (மே 13) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 67. இதையடுத்து, சொந்த ஊரான நாகை மாவட்டம் சித்தமல்லி கிராமத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு, நாளை (மே 14) காலை 10 மணி அளவில் இறுதி நிகழ்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் :
இதற்கிடையே, எம்.பி செல்வராசுவின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், டெல்டா மாவட்டங்களின் ரயில்வே திட்டங்களுக்காகவும், வேளாண் பெருங்குடி மக்களின் உரிமைகளுக்காகவும் பல போராட்டங்களை முன்னெடுத்தவர் செல்வராசு என்று புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், அவரது மறைவு பொதுவுடைமை இயக்கத்துக்கும், டெல்டா மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
இ.கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் :
செல்வராசுவின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செங்கொடி தாழ்த்தி, செவ்வணக்கம் கூறி, அஞ்சலி தெரிவித்துக் கொள்கிறது என அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தமிழ்நாடு முழுவதும் கட்சி அமைப்புகள், செங்கொடியினை அரைக் கம்பத்திற்கு இறக்கி விட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
What's Your Reaction?