ஊழியர்களின் மீது எந்த துறைரீதியான நடவடிக்கை எடுக்க கூடாது -அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் ஜனவரி 19ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்

Jan 10, 2024 - 18:38
ஊழியர்களின் மீது எந்த துறைரீதியான நடவடிக்கை எடுக்க கூடாது -அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு நாளை (ஜனவரி 11) முதல் உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும்.போராடிய ஊழியர்களின் மீது எந்த துறைரீதியான நடவடிக்கையும் எடுக்க கூடாது என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்களை வழங்குதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்ததை அடுத்து, ஜனவரி 9 முதல்  வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக கடந்த டிசம்பர் 19ஆம் தேதி அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, பாட்டாளி, பி.எம்.எஸ், ஐ.என்.டி.யு.சி, எச்.எம்.எஸ். உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கின. 

இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி, சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பால் கிதியோன் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், எட்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள விவகாரத்தில் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. 

மேலும், பொது மக்களின் நடமாட்டத்துக்கும், பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் சுமூகமாக செயல்படுவதை தடுக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபூர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, போக்குவரத்து தொழிலாளர்கள் விவகாரத்தில் அரசின் நடவடிக்கை என்ன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு அரசு சார்பில் ஆஜராக கூடுதல் தலைமை வழக்கறிஞர், உச்சநீதிமன்ற உத்தரவின் படி அவ்வபோது பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்பட்டது. சுமார் 7000 போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஊழியர்கள் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து தீர்த்து வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஊழியர்கள் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்காமல் புதிய கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிற்சங்க விதிகளின் படி, ஊழியர்கள் போராட்டம் நடத்த அடிப்படை உரிமை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. 

நேற்று (ஜனவரி 09) அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர்.இன்று (ஜனவரி 10) போராட்டத்தில் கலந்து கொள்ள கூடாது என ஊழியர்களிடம் சங்கங்கள் கடுமையாக நடந்து கொள்கின்றன.பொங்கல் பண்டிகைக்கு பிறகு தீர்வு காணப்படும் என அரசு உறுதி அளித்த பின்பும் போராட்டத்தை கையில் ஊழியர்கள் எடுத்துள்ளனர் என தெரிவித்தார்.5 சதவிகித அகவிலைப்படி ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகள் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.அதனால், வேலைக்கு திரும்ப உத்தரவிட வேண்டும் என அரசு சார்பில் கோரிக்கை விடுவிக்கப்பட்டது. 


இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஊழியர்களின் கோரிக்கைகளை தீர்த்து வைக்காமல், அரசு முரண்பாடான வாதத்தை நீதிமன்றத்தில் முன்வைப்பதை ஏற்க முடியாது. கடந்த 10 ஆண்டுகளாக ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாததால், போராட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை நீதிமன்றம் உணரமுடிகிறது.ஆனால், விழாக்காலங்களில் ஏன் போராட்டம் நடத்த வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் கேள்வி? மூத்த குடிமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஊழியர்களுக்கு சாதகமாக உத்தரவு பிறப்பிக்கிறோம், போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு செல்ல தயாரா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

உரிய காரணங்களுக்காக போராட்டம் நடத்தப்படுவதாக இருந்தாலும், சூழ்நிலை கருதி போராட்டத்தை கைவிட வேண்டும். போராட்டத்தை நடத்த ஊழியர்களுக்கு முழு உரிமை உள்ளது. பண்டிகை முடிந்த பின் போராட்டத்தை தொடரலாமே? சுமார் 92,000 ஊழியர்கள் ஓய்வூதியம் கேட்டு போராடுகின்றனர். அரசு ஏன் கருத்தில் கொள்ளவில்லை.ஊழியர்கள் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியாமல், அரசு பிடிவாதமாக செயல்படுகிறது. ஓய்வு பெற்ற ஊழியர்களின் கணக்கில் உடனடியாக குறைந்தபட்சம் 2,000 ரூபாய் செலுத்த அரசு தயாராக உள்ளதா? கடந்த டிசம்பர் மாதம் ஊழியர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் அரசு கண்மூடித்தனமாக இருந்துள்ளது.  

மக்களின் நலனை முக்கியமாக கருதி, போராட்ட ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும். நாளை (ஜனவரி 11) முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு திரும்ப வேண்டும். போராடிய ஊழியர்களின் மீது எந்த துறைரீதியான நடவடிக்கையும் எடுக்க கூடாது என அரசுக்கு உத்தரவிட்டனர்.மேலும், தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் ஜனவரி 19ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow