சர்க்கரை ஆலை ஜப்திக்கு வந்த அதிகாரிகளுக்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ஆலை நிர்வாகம் வட்டியுடன் ரூ.6 கோடி வழங்கவேண்டும் என தீர்ப்பளித்தது.
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை ஜப்தி செய்ய வந்த அதிகாரிகளை தடுத்தி நிறுத்தி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து கரும்பு விவசாயிகளிடம் பேசினோம். “ கடந்த 1993ம் ஆண்டு பின்னி நிறுவனம் இந்த சர்க்கரை ஆலையை 3500 டன் கரும்பு பிழியும் வகையில் ஒப்பந்த முறையில் விரிவாக்கம் செய்ய முன் வந்தது. விரிவாக்கம் செய்த பின்னர் முழுக்கொள்ளளவும் கரும்பு பிழிய இயலாததால் ஆலை நஷ்டத்தில் இயங்கியது. அதன்பின் தொடர்ந்து நஷ்டம் மேற்பட பல்வேறு காரணங்கால் நலிவுற்ற சர்க்கரை ஆலை எண் அறிவிக்கப்பட்டு கடந்த 2017ம் ஆம் ஆண்டு மூடப்பட்டது.
இந்நிலையில் மேற்கண்ட விரிவாக்க பணிக்காக பின்னி நிறுவனத்திற்கு வழங்கவேண்டிய பாக்கித்தொகை ரூ.3 கோடியை ஆலை நிர்வாகம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.இது தொடர்பாக பின்னி நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து ஆலை நிர்வாகம் வட்டியுடன் ரூ.6 கோடி வழங்கவேண்டும் என தீர்ப்பளித்தது.
அந்த ரூ.6 கோடியையும் ஆலை நிர்வாகம் வழங்காததையடுத்து ஆலையின் கட்டிடம் மற்றும் நிலங்கள் உள்பட 33 இடங்களை கையகப்படுத்த அதன் மதிப்பை கணக்கீடு செய்வதற்காக நேற்று முன்தினம் ஆலைக்கு வந்த மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்ற அலுவலர்கள், வருவாய்துறை மற்றும் நில அளவை அலுவலர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் திரும்பிச்சென்றனர்.
இந்நிலையில் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் ஜப்தி நடவடிக்கைக்கு 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஆலைக்கு வந்தனர். இதனையறிந்த கரும்பு விவசாயிகளான நாங்கள் தமிழ்நாடு விவசாய சங்க மாநில செயலாளர் துரைராஜன் தலைமையில் ஒன்றுகூடி அதிகாரிகளை ஆலைக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
அத்துடன் ஆலையை கையகப்படுத்துவதை தமிழக அரசு தடுத்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.கரும்பு விவசாயிகளின் நலன் கருதி மீண்டும் ஆலையை இயக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம்.” என்றனர்.
இது குறித்து அதிகாரிகளிடம் பேசினோம். “நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் பொருட்டுதான் ஆலையை ஜப்தி செய்ய வந்தோம். இதற்கு கரும்பு விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மீண்டும் உயர் அதிகாரிகள் ஆலோசனை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்றனர்.
What's Your Reaction?