வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிப்பு

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை இண்டர்போல் போலீஸ் உதவியுடன் கைது செய்ய சென்னை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Feb 9, 2024 - 08:20
Feb 9, 2024 - 18:08
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிப்பு

சென்னையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என பள்ளி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.

சென்னையில் 15-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நேற்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த தனியார் பள்ளி நிர்வாகங்கள் பெற்றோரை அழைத்து மாணவர்களை விரைவாக வெளியேற்றினர். இதைத்தொடர்ந்து சென்னை மாநகர போலீசார், சென்னை பாரிமுனை, கீழ்ப்பாக்கம், கோபாலபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. முன்னதாக பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர் அச்சத்துடன் பள்ளிகளுக்கு படையெடுத்ததால் பதற்றமான சூழல் நிலவியது.

சென்னை மாநகர போலீசார் பெற்றோர், ஆசிரியர்கள் என யாரும் பதற்றம் அடைய வேண்டாம் என அறிவுறுத்தியது. தொடர்ந்து நேற்று சென்னை முழுவதும் பல்வேறு பள்ளிகளில் வியாழக்கிழமை மாலை வரை சோதனை நடத்தப்பட்ட போதும், எதுவும் கிடைக்காததால் தகவல் வெறும் வதந்தி என போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

மேலும் மிரட்டல் விடுத்த நபர் யார் என கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மிரட்டல் விடுத்த நபர், தன்னை கண்டுபிடிக்க முடியாதபடி இணையத்தை பயன்படுத்தி உள்ளதாகவும், இதனால் கைது நடவடிக்கையில் சற்று தாமதம் ஏற்படும் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்க சென்னை போலீசார் இண்டர்போல் உதவியை நாட முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மிரட்டல் விடுத்த நபர் வெளிநாட்டில் இருந்து மிரட்டல் விடுத்துள்ளதாகவும், ஆகையால் இந்த நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சென்னையில் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளிகள் அனைத்தும் வெள்ளியன்று வழக்கம் போல் செயல்படும் என்று பள்ளி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. ஆகையால் மாணவ, மாணவிகள் அச்சமின்றி பள்ளிக்கு வரலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow