இறுதிச்சடங்கு இந்து முறைப்படியா..? இஸ்லாமிய முறைப்படியா..? இரு மனைவிகள் சண்டை - இடியாப்ப சிக்கலை தீர்த்து வைத்த கோர்ட்..

Feb 22, 2024 - 10:24
இறுதிச்சடங்கு இந்து முறைப்படியா..? இஸ்லாமிய முறைப்படியா..? இரு மனைவிகள் சண்டை - இடியாப்ப சிக்கலை தீர்த்து வைத்த கோர்ட்..

இஸ்லாமியராக மாறி இரண்டாம் திருமணம் செய்துக்கொண்ட தனது கணவரின் உடலை இந்து மத முறைப்படி இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என்று முதல் மனைவி தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வித்தியாசமான தீர்ப்பளித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி  பர்மா காலனி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (எ) அன்வர் உசேன். 55 வயதான இவர்  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் 1988 ஆம் ஆண்டு சாந்தி என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.

இந்நிலையில் சாந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்த பாலசுப்பிரமணியன், இஸ்லாம் மதத்திற்கு மாறி தனது பெயரை அன்வர் உசேன் என மாற்றிக்கொண்டார். இதையடுத்து, திருப்பாலைக்குடி பகுதியைச் சேர்ந்த சையத்அலி பாத்திமா என்பவரை 28 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.  

இதற்கிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடலை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய சையத்அலி பாத்திமா தரப்பினர் ஏற்பாடு செய்தநிலையில்,  திடீரென்று அங்கு வந்த முதல் மனைவி சாந்தி தரப்பினர், பாலசுப்பிரமணியனின் பூர்வீக ஊரான ராமநாதபுரம் மாவட்ட பேரையூரில் இந்து முறைப்படி தகனம் செய்ய போவதாகவும், உடலை தங்களிடம் தர வேண்டும் என்று சண்டையிட்டுள்ளனர். 

இந்த விவகாரம் காவல்துறைக்கு செல்ல, இருத்தரப்பினரிடமும் வருவாய் துறையினர் முன்னிலையில்  பேச்சுவார்த்தை நடைபெற்றது. தீர்வு எட்டப்படாததால் உடலை கைப்பற்றி போலீசார்,  காரைக்குடி அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் வைத்தனர். கணவர் உடலை யார் அடக்கம் செய்வது என்று இரண்டு மனைவிகளும் நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்று உடலை பெற்று கொள்ளுமாறு கூறி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். 

இதையடுத்து, பாலசுப்ரமணியன் (எ) அன்வர் உசேன்னின்  முதல் மனைவி சாந்தி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அவசர வழக்கு தொடுத்தார். இதை விசாரித்த நீதிபதி  ஜி.ஆர்.சுவாமிநாதன், இரு தரப்பு வாதங்களையும் கேட்டு சிக்கலை சுமுகமாக தீர்த்து வைத்தார். "அரசு மருத்துவமனையில் உள்ள ஓட்டுநரின் உடலை முதலில் முதல் மனைவியிடம் சாந்தியிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் தங்களது மதப்படி சடங்குகளை செய்து அரை மணி நேரத்தில் முடித்துவிட்டு காரைக்குடி முஸ்லிம் ஜமாத் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். அதன் பின்னர் இரண்டாவது மனைவி இறுதி மரியாதை செய்து இஸ்லாமிய சடங்குகள் படி அடக்கம் செய்யலாம்" என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை முடித்து வைத்தார்.

நீதிமன்ற உத்தரவின்பேரில் முதல் மனைவி சாந்தி, தனது கணவருக்கு இந்து மத முறைப்படி இறுதிச்சடங்கு செய்து, பின்னர் இஸ்லாமிய முறைப்படை உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

உயிருடன் இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனைகளை விட பாலசுப்பிரமணியன் (எ) அன்வர் உசேன், இறந்த பின்னர் சந்தித்த பிரச்சனைகள் தான் அதிகம் என்று இறுதிச்சடங்குக்கு வந்தவர்கள் மனம் விசும்பினர்.

மேலும் படிக்க :

https://kumudam.com/Prime-Minister-Modi-coming-to-Tirupur...-The-BJP-gave-a-bit-notice-through-a-robot..

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow