மயிலை: குப்பைகளை தேக்கி வைத்திருந்தவருக்கு ரூ.10000 அபராதம்
உரிய பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவேண்டும்
மயிலாடுதுறையில் சுகாதாரமற்ற முறையில் குப்பைகளை தேக்கிவைத்திருந்த குடியிருப்பு வளாக உரிமையாளருக்கு கலெக்டர் மகாபாரதி ரூ.10000 அபராதம் விதித்த சம்பவம் பலரது பாராட்டையும் பெற்றிருக்கிறது.
மயிலாடுதுறை துர்கையம்மன் கோவில் தெருவில் குப்பைகள் சேகரிக்கப்படுவதை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார். அப்போது குப்பைகளை தரம்பிரித்து தூய்மைப்பணியாளர்களிடம் வழங்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து மகாதானத்தெருவில் ஆய்வு மேற்கொண்டபோது அங்குள்ள ’ஹிமனா காம்பள்ஸ்’ என்ற குடியிருப்பு பகுதியில் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்காமல் குப்பைகளை சுகாதரமற்ற முறையில் தேக்கி வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சியான கலெக்டர் குடியிருப்பு வளாக உரிமையாளருக்கு ரூ.10000 ரூபாய் அபராதம் விதித்தார்.
கலெக்டரிடம் பேசினோம். “குப்பைகளை தரம்பிரித்து தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்காமல் சுகாதரமற்ற முறையில் தேக்கி வைத்திருப்போர்களுக்கு ரூ.500 முதல் ரூ.10000 வரை அபராதம் விதிக்கப்படும். ஆடு, மாடு, மீன், கோழி மாமிச கழிவுகளை பொதுவெளியில் கொட்டினாலும் அபராதம் விதிக்கப்படும்.” என்றார்.
தொடர்ந்து மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பாதுகாப்பற்ற முறையில் மேம்பாட்டுப்பணிகள் நடைபெற்று வருவதாக புகார் எழுந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கே கட்டிடம் கட்ட அஸ்திவாரம் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து ஒரு பெண் காயமடைந்ததை தொடர்ந்து கலெக்டர் மகாபாரதி அங்கே சென்று பணிகளை ஆய்வு செய்தார். அப்போது உரிய பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்று உத்தரவிட்டார்.
அடுத்து சீர்காழியில் உள்ள உழவர் சந்தையை ஆய்வு செய்த கலெக்டர் மகாபாரதி உழவர் சந்தையின் முகப்பு பகுதியில் எந்தவித அனுமதியும் பெறாமல் காய்கறி, பழங்கள் விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி நகராட்சி ஆணையர் மற்றும் போலீசாருக்கு அறிவுறுத்தினார்.மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியின் இந்த அதிரடி நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் தங்களது பாராட்டை தெரிவித்தனர்.
-ஆர்.விவேக் ஆனந்தன்
What's Your Reaction?