தூத்துக்குடி ஜி.ஹெச்சில் ரத்தம் படிந்த கத்தரிக்கோலை சுத்தம் செய்த சிறுவன்

யாராவது தவறு செய்தது தெரிய வந்தால் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்

Dec 12, 2023 - 12:48
Dec 12, 2023 - 17:36
தூத்துக்குடி ஜி.ஹெச்சில் ரத்தம் படிந்த கத்தரிக்கோலை சுத்தம் செய்த சிறுவன்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரத்தம் வடிந்த கத்தரிக்கோலை பத்து வயது சிறுவன் சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தான் இந்த அவலம் நடந்திருக்கிறது.அவசர சிகிச்சை பிரிவில் பத்து வயது சிறுவன் ஒருவன் அங்குள்ள வாஸ்பேஷனில் ரத்தம் வடிந்த கத்தரிக்கோலையும் கத்தியையும் கழுவி சுத்தம் செய்கிறான்.அந்தக் காட்சியை பார்த்த ஒருவர் அதை வீடியோவாக பதிவு செய்கிறார்.

கத்தரிக்கோலை உன்னிடம் கொடுத்து யார் சுத்தம் செய்ய சொன்னார்கள் என்று அவர் கேட்கிறார்.அதற்கு அந்த சிறுவன் டாக்டர்கள் தான் கொடுத்தார்கள் என்று சொல்கிறான்.

இதுகுறித்து  சமூக ஆர்வலர்களிடம் பேசினோம் "காயம் பட்ட இடங்களில் சிகிச்சை அளிக்கும் கத்தரிக்கோல் போன்ற உபகரணங்களை சுத்தம் செய்வதற்கென்றே விதிமுறைகள் இருக்கிறது.சூடான வெந்நீரில், அதற்கு தேவையான கெமிக்கல்ஸ் சேர்த்து சுத்தம் செய்ய வேண்டும்.கைகளில் கண்டிப்பாக உரை மாட்டி இருக்க வேண்டும். இல்லையென்றால் நோய் கிருமிகள் கைகள் வழியாக உடம்புக்கு பரவுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.இது எல்லாம் தெரிந்த டாக்டர்களோ, செவிலியர்களோ 10 வயது சிறுவனிடம் சுத்தம் செய்ய சொன்னது மிகப்பெரிய தவறாகும். அரசு ஆஸ்பத்திரிக்கு ஏழை எளிய மக்கள்தான் வருகிறார்கள். அவர்களது ஏழ்மையை எப்படியா பயன்படுத்துவது? அந்த சிறுவன் உடலில் நோய் கிருமிகள் பரவி பாதிப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பாவது?

தூத்துக்குடி அரசு மருத்துவமனையை பொருத்தவரை அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் அனைவரும் தனியாக மருத்துவமனை வைத்து நடத்துகிறார்கள்.அவர்கள் அரசு மருத்துவமனைக்கு பார்வையாளர்களாக தான் வருகிறார்கள். அங்கு சிகிச்சைக்காக வரும் பொது மக்களை அவர்கள் சுமையாகவே பார்க்கிறார்கள்.வாங்கும் சம்பளத்திற்கு அவர்கள் பணிபுரிவதில்லை. ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் சென்னையில் பிறந்தவுடன் இறந்த பச்சிளம் குழந்தையின் உடலை அட்டை பெட்டியல் போட்டு கொடுத்து அனுப்பிய அதிர்ச்சி சம்பவம் நடந்தது. அந்த சம்பவம்  கண்ணை விட்டு மறைவதற்குள் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் தூத்துக்குடியில் அரங்கேறி இருக்கிறது.

கருணையே உருவமான செவிலியர்களோ இப்போது அதைவிட மோசமாகி போனார்கள். பெரும்பாலான செவிலியர்கள்  நர்சிங் கோர்ஸ் படிக்கும் மாணவிகளிடம் வேலை வாங்கிவிட்டு ஓய்வெடுப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதுபோன்ற காரணங்கள் தான் பத்து வயது சிறுவனை சுத்தம் செய்ய வைத்திருக்கும் சம்பவங்களுக்கு அடிப்படை காரணமாகும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்" என்றார்கள்.

இதுகுறித்து தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டீன் டாக்டர் சிவகுமாரிடம் கேட்டோம் "தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இதுபோன்று வேலைகள் செய்வதற்கு  400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருக்கிறார்கள். எனவே தவறு நடப்பதற்கு வாய்ப்புகள் குறைவு.இருந்தாலும் விசாரிக்க சொல்லியிருக்கிறேன்.யாராவது தவறு செய்தது தெரிய வந்தால் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்

-எஸ்.அண்ணாதுரை

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow