முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து 

முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு சிபிஐ நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது

Nov 28, 2023 - 11:18
Nov 28, 2023 - 13:17
முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து 

சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

கடந்த 1991 முதல் 1996 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் 1995 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்த செல்வகணபதி இருந்தபோது, தமிழகம் முழுவதும் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில் 23 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், செல்வகணபதி, ஐஏஎஸ் அதிகாரிகள் ஜெ.டி.ஆச்சார்யலு, எம்.சத்தியமூர்த்தி உள்பட 5 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 2014ம் ஆண்டு தீர்ப்பளித்தது.அதேசமயம், கூட்டுச் சதி குற்றச்சாட்டில் இருந்து இவர்களை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தது.

கூட்டுசதி குற்றச்சாட்டில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ தரப்பிலும், சிறை தண்டனையை எதிர்த்து செல்வகணபதி உள்ளிட்டோர் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2014ஆம் ஆண்டில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணை நடைபெற்றபோது, குற்றவாளிகள் தரப்பில், பணிகள் முடித்து 3 ஆண்டுகள் கழித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும், அதன்பின்னர் ஒன்றரை ஆண்டிற்கு பிறகே அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகவும், சுடுகாடுகளுக்கு சுற்றுச்சுவர் இல்லாததாலும், திறந்தவெளி அமைந்திருந்ததாலும், அப்பகுதியில் உள்ளவர்களாலேயே கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் வாதிடப்பட்டது.

புகார் அளித்த வழக்கறிஞர் ரவிச்சந்திரனிடம் விசாரிக்கவில்லை என்றும், உரிய ஆய்வு நடத்தாமல் இருந்த சிபிஐ திடீரென அறிக்கை தாக்கல் செய்ததை சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதும், தண்டனை வழங்கியதும் தவறு என்பதால், தீர்ப்பை ரத்து செய்து தங்களை விடுதலை செய்ய வேண்டுமெனவும் வாதிடப்பட்டது.

சிபிஐ தரப்பில், மத்திய அரசு திட்ட நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது, 100 சுடுகாடுகளுக்கு மேற்கூரை அமைக்க ஒப்புதல் அளித்துவிட்டு 96 சுடுகாடுகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளது.அதிலும் தலா 23 லட்ச ரூபாய் தொகையை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் 17 லட்ச ரூபாய் அளவிற்கு மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது என வாதிடப்பட்டது. எனவே சிறப்பு நீதிமன்ற விதித்த சிறை தண்டனையை உறுதிசெய்வதுடன், கூட்டுச்சதி குற்றச்சாட்டிலும் அனைவரையும் தண்டிக்க வேண்டுமென வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்குகளின் மீதான தீர்ப்பை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் கடந்த நவம்பர் 9ஆம் தேதி தள்ளிவைத்திருந்தார்.இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு சிபிஐ நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.மேலும், அரசு தரப்பில் மறுஆய்வு செய்யவும் அனுமதி அளித்து தீர்ப்பளித்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow