நாடாளுமன்றத்தில் செங்கோலை அகற்றச் சொன்ன எதிர்க்கட்சிகள்... தமிழ் கலாசாரத்தை அவமதிப்பதாக பாஜக குற்றச்சாட்டு!
''நமது நாடு அரசியலமைப்பு சட்டத்தின்படி செயல்பட போகிறதா? இல்லை மன்னராட்சியின் படி நடக்க போகிறதா? பிறகு நாடாளுமன்றத்தில் எதற்கு செங்கோல் வைக்கப்பட்டுள்ளது? இந்திய அரசியலமைப்பை பாதுகாக்க மக்களவையில் இருந்து செங்கோலை அகற்றுவது மிகவும் அவசியமாகும்''
டெல்லி: நாடாளுமன்றத்தில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள. இதன்மூலம் 'இந்தியா' கூட்டணி தமிழ் கலாசாரத்தை அவமதிக்கிறது என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழா நடந்தது. அப்போது பிரதமர் மோடி மன்னராட்சியின் அடையாளத்தை குறிக்கும் 'செங்கோல்' ஒன்றை மக்களவையில் சபாநாயகர் இருக்கை அருகில் வைத்தார்.
தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஆதினங்கள் பிரதமர் மோடி கையில் செங்கோலை ஒப்படைத்தனர். ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுந்திரம் பெற்றபோது, நாட்டின் முதல் பிரதமர் நேருவிடம் ஆங்கிலேய அதிகாரிகள் ஆட்சியை ஒப்படைக்கும் விதமாக செங்கோலை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாடி கட்சியின் எம்பி ஆர்.கே.செளத்ரி, நாடாளுமன்றத்தில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் என சில நாட்களுக்கு முன்பு மக்களவையில் இடைக்கால சபாநாயகராக இருந்த பர்த்ருஹரி மஹ்தாப்புக்கு கடிதம் எழுதி இருந்தார்.
அந்த கடிதத்தில், ''மக்களவையில் சபாநாயகருக்கு அருகில் இருக்கும் செங்கோலை அகற்றி விட்டு, அரசியலமைப்பு புத்தகத்தை வைக்க வேண்டும். நமது ஜனநாயகத்தின் சின்னம் அரசியலமைப்புதான். மன்னராட்சியை குறிக்கும் செங்கோல் அல்ல.
நமது நாடு அரசியலமைப்பு சட்டத்தின்படி செயல்பட போகிறதா? இல்லை மன்னராட்சியின் படி நடக்க போகிறதா? பிறகு நாடாளுமன்றத்தில் எதற்கு செங்கோல் வைக்கப்பட்டுள்ளது? இந்திய அரசியலமைப்பை பாதுகாக்க மக்களவையில் இருந்து செங்கோலை அகற்றுவது மிகவும் அவசியமாகும்'' என்று ஆர்.கே.செளத்ரி கூறி இருந்தார்.
சமாஜ்வாடி கட்சி தலைரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் ஆர்.கே.செளத்ரியின் கருத்தை ஆதரித்து பேசினார். இதேபோல் காங்கிரசின் ரேணுகா செளத்ரி, ''சமாஜ்வாடியின் கோரிக்கை நியாயமானதுதான். பாஜக அரசு மற்ற கட்சிகளை ஆலோசிக்காமல் செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்துள்ளது. அனைத்து கட்சிகளின் ஒருமித்த கருத்தை பதிவு செய்த பிறகு நாடாளுமன்றத்தில் எந்த விஷயத்தையும் செய்ய வேண்டும்'' என்றார்.
காங்கிரஸ் எம்பி தமிழ்நாட்டை சேர்ந்த மாணிக்கம் தாகூர், ''இந்தியாவில் இப்போது மக்களாட்சி நடக்கும்போது மன்னராட்சியை குறிக்கும் செங்கோல் தேவையில்லை'' என்றார். இதேபோல் இந்தியா கூட்டணியை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் செங்கோலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்நிலையில், செங்கோலை அகற்ற சொன்னதன் மூலம் இந்தியா கூட்டணி தமிழ் கலாசாரத்தை அவமத்துள்ளது என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், ''இந்திய நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை சமாஜ்வாதி கட்சி எப்போதுமே மதித்ததில்லை.
'செங்கோல்' பற்றிய அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் கண்டனத்துக்குரியது மட்டுமின்றி அவர்களின் அறியாமையையும் காட்டுகிறது. குறிப்பாக தமிழ் கலாசாரத்துக்கு எதிரான இந்தியா கூட்டணிக் கட்சிகளின் அறியாமையை காட்டுகிறது. 'செங்கோல்' இந்தியாவின் பெருமையான அடையாளங்களுள் ஒன்று. பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் செங்கோலுக்கு உயரிய மரியாதையை அளித்து இந்தியர்கள் அனைவருக்குமே பெருமை சேர்த்துள்ளார்'' என்று கூறியுள்ளார்.
இதேபோல் தமாகா தலைவர் ஜி.கே.வாசனும் இந்தியா கூட்டணிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சங்ககால மன்னர்களின் ஆட்சியில் செங்கோலுக்கு தனி இடம் உண்டு. நேர்மைக்கும், வெளிப்படைத் தன்மைக்கும், நடுநிலைக்கும் செங்கோல் எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது.
பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவி தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில், சமாஜ்வாடி கட்சி செங்கோலை அகற்ற சொன்னது கண்டிக்கத்தக்கது. இந்த கருத்தை இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், திமுக கட்சிகள் ஏற்றுக் கொள்கிறதா?'' என்று கூறியுள்ளார்.
What's Your Reaction?