ரெய்டு பயம்.. அண்ணாமலையுடன் திமுக அமைச்சர்களுக்கு தொடர்பு..பற்ற வைத்த திருச்சி சூர்யா Exclusive
ரெய்டு பயம் காரணமாக திமுக அமைச்சர்கள் பலரும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையுடன் ரகசிய தொடர்பில் இருப்பதாக பாஜகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட திருச்சி சூர்யா கூறியுள்ளார். தமிழக அரசின் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அண்ணாமலையுடன் தொடர்பில் உள்ளதாகவும் கூறியுள்ளார் திருச்சி சூர்யா.
தமிழ்நாடு பாஜகவில் இருந்து இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா 2வது முறையாக கட்சியில் இருந்து கடந்த 20ம் தேதி நீக்கப்பட்டார். அதனை தொடர்ந்து திருச்சி சூர்யா சிவா, பாஜக மீதும், பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி சூர்யா தனது பதிவில், பாஜக மையக் குழுவில் கட்சி தலைமையும் தலைவர்களையும் விமர்சித்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று என்னையும் கல்யாண ராம அவர்களையும் நீக்கினீர்கள் நியாயம் ஏற்றுக் கொள்கிறேன். இதற்கெல்லாம் ஆரம்ப புள்ளியாக இருந்து கட்சியில் ரௌடிகள் இருக்கிறார்கள் என்றும், அதிமுகவுடனான கூட்டணியை கெடுத்து வெற்றியை தடுத்து விட்டார் என்றும் மாநிலத் தலைவரின் செயல்பாட்டையும் விமர்சனம் செய்த தமிழிசை மேல் நடவடிக்கை ஏன் இல்லை? நாடார் என்பதாலா?
தமிழிசை சொன்னதை உண்மை என்று இந்திய தேசிய பாஜக தலைமை கருதி இருந்தால் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதற்கு தடையாக இருந்தது எது கவுண்டர் லாபியா? என்று பதிவிட்டிருந்தார்.தமிழ்நாட்டில் பாஜக நாற்பது இடங்களில் தோற்றதிற்கு வீட்டு வாசலில் வெடி வெடித்து கொண்டாடிய, திமுகவின் கலைஞர் 100 நிகழ்ச்சியில் மேடை ஏறி உரையாற்றிய SVe.சேகர் இன்னும் பாஜக உறுப்பினராக இருக்கிறார் ஏன் அவர் மீது நடவடிக்கை இல்லை? பிராமணர் என்பதாலா? சாதி படிநிலை அடிப்படையில்தான் நடவடிக்கை பாயுமா?என்றும் கேள்வி எழுப்பியிருந்தார் திருச்சி சூர்யா. எல்லோரும் இந்து என்று மேடையில் ஒப்புக்கு சொல்லிவிட்டு, சாதி லாபிகளுக்கு அடிபணிந்து Social Engineering அப்பட்டமாக அம்பலப்பட்டிருக்கிறது என்று பதிவிட்டதற்கு திருச்சி சூர்யாவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
திருச்சி சூர்யா மீண்டும் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில்,கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கெஞ்சுவதற்காக இந்த பதிவுகள் இல்லை. நீங்கள் என்ன,என்னை வேண்டாம் என்று சொல்வது, நான் கூறுகிறேன் எனக்கு பாஜக வேண்டாம். வேண்டவே வேண்டாம்.என் மேல் நடவடிக்கை எடுக்க நிர்பந்தித்த உத்தமர்களின் யோக்கியதையையும், தமிழ்நாட்டில் பாஜக வளராமல் பார்த்துக் கொள்ள கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்ப்பவர்களையும் அம்பலப்படுத்துவதே தற்போதைய மிஷன். என் மேல் நடவடிக்கை எடுத்த வீராதிவீரர்களுக்கு பாஜகவுக்கு குழி தோண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் ஏன் வரவில்லை. பயமா? அண்ணாமலை.
அண்ணாமலை இவ்வளவு நாள் தம்பியாக பார்த்தார். இந்த தம்பியின் மறுபக்கத்தை பார்ப்பார். உடன் இருப்பவரின் பலம் எதிர்த்து அடிக்கும் போது தான் தெரியும்.
அதிகபட்சம் அமர் பிரசாதையும் கல்யாண ராமனையும் தமிழ்நாடு காவல்துறையை வைத்து கைது செய்தது போல் எனக்கும் வலை விரிப்பார்.
கூட இருப்பவர்களை கழுத்தறுப்பது தான் அவருக்கு கைவந்த கலை ஆச்சே...எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் நமது குமுதம் ரிப்போர்ட்டர் இணைய தள பக்கத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்த திருச்சி சூர்யா, திமுக அமைச்சர்கள் பலரும் அண்ணாமலையுடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்தார்.
அண்ணாமலையுடன் தொடர்பில் இருக்கும் அமைச்சர்கள் பற்றி எனக்கு தெரியும். தங்கள் வீட்டிற்கு யாரும் ரெய்டுக்கு வரக்கூடாது என்பதற்காக திமுக அமைச்சர்கள் பலரும் அண்ணாமலையிடம் அடிபணிந்துள்ளனர்.திமுக அமைச்சர்கள் கொடுத்த தகவலை வைத்தே DMK files என்ற வீடியோவை வெளியிட்டார் அண்ணாமலை
செந்தில்பாலாஜியின் நிலை தங்களுக்கு வரக்கூடாது என திமுக அமைச்சர்கள் பலரும் அண்ணாமலையுடன் கரம் கோர்த்துள்ளனர்.நான் பாஜகவிற்கு விஸ்வாசமாக இருந்தேன். யோக்கிய சிகாமணியாக இருந்தால் சுப்பிரமணியசாமி, தமிழிசை சவுந்தரராஜன்,எஸ்.வி சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல மூத்த அமைச்சர்கள் அண்ணாமலையுடன் தொடர்பில் உள்ளனர். தமிழக அரசின் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அண்ணாமலையுடன் தொடர்பில் உள்ளனர் என்றும் பகீர் தகவலை கூறியுள்ளார் திருச்சி சூர்யா. இன்னும் என்னென்ன சொல்லப்போகிறாரோ திருச்சி சூர்யா.
What's Your Reaction?