அயோத்தியில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு : கோபுரத்தில் சிறப்பு கொடியை ஏற்றி வைத்தார்

அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் குழந்தை ராமர் முன்பாக பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆகியோர் வழிபாடு மேற்கொண்டனர். இதன் பின்னர் கோபுரத்தின் உச்சியில் சிறப்புக் கொடியை பிரதமர் மோடி ஏற்றி வைத்தார். 

அயோத்தியில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு : கோபுரத்தில் சிறப்பு கொடியை ஏற்றி வைத்தார்
special prayers in Ayodhya

அயோத்தி ராமர் கோயிலில் கொடியேற்றும் திருவிழா இன்று நடைபெறுகிறது. இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அயோத்தி சென்றார். அவரை உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்தி பென், முதல்வர் யோகி ஆதித்யாநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அயோத்தி ராமர் கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள மஹரிஷி வசிஷ்டர், மஹரிஷி விஸ்வாமித்திரர், மஹரிஷி அகத்தியர், மஹரிஷி வால்மீகி, தேவி அஹில்யா, நிஷாத்ராஜ் குகன், அன்னை சபரி ஆகியோரின் ஏழு கோயில்களுக்குச் சென்று பிரதமர் தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து, அவர் சேஷாவதார் கோயிலுக்குச் சென்றார்.

அன்னபூர்ணா தேவி கோயிலுக்குச் சென்ற பிரதமர் அதனைத் தொடர்ந்து, குழந்தை ராமர் கோயிலுக்குச் சென்று ராமரை தரிசனம் செய்து, பூஜையில் ஈடுபட்டார். அவருடன், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தும் பூஜையில் ஈடுபட்டார்.

முன்னதாக டில்லியில் இருந்து விமானம் மூலம் அயோத்திக்கு வருகை தந்த பிரதமர் மோடியை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் வரவேற்றார். தொடர்ந்து, காரில் ரோடு ஷோ மேற்கொண்ட பிரதமர் மோடி, சாலையின் இருபுறங்களிலும் குவிந்திருந்த பக்தர்களுக்கு உற்சாகத்துடன் வணக்கம் செலுத்தினார்.

இதன் பின்னர் அயோத்தியில் சாமி தரிசனம் செய்த பிறகு, 191 அடி உயரமுள்ள பிரதான கோபுரத்தின் உச்சியில் 20 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்டு தயாரிக்கப்பட்ட சிறப்புக் கொடியைப் பிரதமர் மோடி இன்று ஏற்றி வைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow