ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு.. உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடித்தபின் மாதவிடாய் விடுப்பு குறித்து முடிவெடுக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.

Aug 28, 2026 - 22:00
ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு.. உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
Highcourt madurai bench

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்குவது தொடர்பான தனி கொள்கையை உருவாக்கக் கோரி, மதுரையைச் சேர்ந்த நர்மதா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

மனுதாரர் தனது மனுவில், "மாதவிடாய் காலங்களில் உரிய விடுமுறை இல்லாததால் பெண் ஊழியர்கள் கடுமையான உடல் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். கர்நாடகா, பீகார், ஒடிசா, கேரளா போன்ற மாநிலங்களில் இத்தகைய விடுமுறைக் கொள்கைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன.

ஆனால் தமிழ்நாட்டில் பெண் ஊழியர்களுக்கு என பிரத்யேக மாதவிடாய் விடுமுறை கொள்கை எதுவுமில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. பெண்களின் உடல்நலச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை அளிக்கவும், தனியார் நிறுவனங்களுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போது சட்டசபைக் கூட்டம் நடைபெற்று வருவதாகவும், அது நிறைவடைந்த பிறகு அரசு இதுகுறித்து உரிய முடிவு எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

அரசுத் தரப்பு விளக்கத்தைப் பதிவு செய்த நீதிபதிகள், சட்டசபைக் கூட்டத்தொடர் முடிந்ததும் அரசு இது தொடர்பாகத் தகுந்த முடிவை எடுக்க வேண்டும் என்றும், தவறினால் நீதிமன்றமே உரிய உத்தரவைப் பிறப்பிக்கும் என்றும் எச்சரித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow