சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டால் குண்டாஸ்.. சென்னையில் 109 பேர் மீது நடவடிக்கை.. சென்னை காவல் ஆணையர் அதிரடி
சென்னையில் தேர்தலையொட்டி கடந்த 21 நாட்களில் 2 பெண்கள் உட்பட 109 குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த ஜனவரி ஒன்றாம் முதல் நேற்று வரை (ஏப்ரல் 21) சென்னை பெருநகரில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சட்டம் ஒழுங்கு குற்றங்களில் ஈடுபட்ட 186 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 64 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்தது உட்பட மொத்தம் 387 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தேர்தலையொட்டி ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 21ஆம் தேதி வரை என 21 நாட்களில் 2 பெண்கள் உட்பட 109 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
What's Your Reaction?