மயிலாடுதுறையில் மாட்டாத சிறுத்தை தஞ்சையில் தஞ்சம்..? வலை விரிக்கும் வனத்துறை...

மயிலாடுதுறையில் கடந்த ஒரு வாரமாக சுற்றித் திரிந்த சிறுத்தை, தஞ்சை திருவிடைமருதூர் பகுதியில் நடமாடுவதாக வெளியான தகவலால் தஞ்சை மக்கள் பீதியடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை நகரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குத்தாலத்தை அடுத்த காஞ்சிவாய் கிராமத்தில் சிறுத்தை உளாவுவது சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தது. இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்ய கடந்த ஒரு வாரமாக அப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தானியங்கி கேமராக்களை பல இடங்களில் பொருத்தி அதிகாரிகள் கண்காணித்தனர். ஆனால் சிறுத்தை தென்படவில்லை. மேலும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அஞ்சப்படும் இடங்களில் 15-க்கும் மேற்பட்ட கூண்டுகள் வைக்கப்பட்டன. இருப்பினும் சிறுத்தை சிக்கவில்லை.
இதனிடையே, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா நரசிங்கம்பேட்டை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில், அந்தப் பகுதிகளில் மூன்று கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
மயிலாடுதுறையில் உளாவிய சிறுத்தை தஞ்சைக்கு இடம் பெயர்ந்ததா? அல்லது இது வேறு சிறுத்தையா என அதன் கால் தடத்தை வைத்து வனத்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். மயிலாடுதுறையை தொடர்ந்து தஞ்சையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வெளியான தகவலால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
What's Your Reaction?






