திருப்பதியில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து.. கோடை விடுமுறையில் ஏழுமலையானை ஈஸியா தரிசிக்க ஏற்பாடு
கோடை கால நெரிசலைக் கருத்தில் கொண்டு திருமலை ஏழுமலையான் கோவிலில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக திருப்பதியில் இலவச தரிசன டோக்கன்களை 30,000 ஆக உயர்த்தியுள்ளதாக திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி கூறியுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள். பொதுவாகவே சாதாரணமான நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கில் ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் வருகை தருவார்கள். பிரம்மோற்சவம், உகாதி, வைகுண்ட ஏகாதசி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தருவார்கள்.
ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் குடும்பம் குடும்பமாக திருப்பதிக்கு ஏழுமலையானை தரிசனம் செய்ய வருகை தருவார்கள். கோடை விடுமுறை நாட்களில் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு திருப்பதியில் கூட்டம் இருக்கும். இதனால் நாள் கணக்கில் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
இந்நிலையில் கோடை காலத்தை முன்னிட்டு திருப்பதி தேவஸ்தானம் தற்போதே பக்தர்களின் வருகையை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. திருப்பதியில் உள்ள நிர்வாகக் கட்டிடத்தில் மாதாந்திர டயல் யுவர் இ.ஓ நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் நாடு முழுவதிலும் இருந்து 29 அழைப்பாளர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டியுடன் உரையாடினர். அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த தருமா ரெட்டி, கோடை கால நெரிசலைக் கருத்தில் கொண்டு, தற்போது விஐபி பிரேக் சிஸ்டத்தை நீக்கிவிட்டு, திருப்பதியில் இலவச தரிசனம் டோக்கன்களை 30,000 ஆக உயர்த்தியுள்ளதாக தெரிவித்தார்.
கோடை விடுமுறையின்போது, பொதுவான பக்தர்களுக்கு அதிக தரிசன நேரங்களை வழங்குவதே தங்களின் முன்னுரிமை என்றும் தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.
பக்தர்களுக்கு லட்டுகள் வழங்க தற்போது 60 கவுண்டர்கள் இயங்கி வருவதாகவும், கோடை விடுமுறையில் மேலும் 15 கவுண்டர்கள் கூடுதலாக அமைக்கப்படும் என்றும், லட்டு வளாகத்தில் உள்ள வரிசையில் காத்திருக்கும் நேரம் விரைவில் சரி செய்யப்படும் என்றும் அவர் அப்போது கூறினார்.
பொதுவாக விஐபி தரிசனம் நேரங்களில் பக்தர்கள் காத்திருக்கும் அறைகளில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். கோடை விடுமுறையில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சாமானிய பக்தர்கள் எளிதில் ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்.
What's Your Reaction?