கிளாம்பாக்கம்.. எடப்பாடி கேட்ட கேள்வி! பட்டென எழுந்த முதல்வர்.! பிரச்சினையே இல்லையென என அமைச்சர் பதில்..!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், சிறு சிறு பிரச்னைகளை சரிசெய்ய வேண்டுமென அதிமுக வலியுறுத்துவதாக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த நிலையில், எதிர்கட்சிகள் சுட்டிக்காட்டும் பிரச்னைகளும் சரிசெய்யப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

Feb 13, 2024 - 12:44
Feb 13, 2024 - 13:09
கிளாம்பாக்கம்.. எடப்பாடி கேட்ட கேள்வி! பட்டென எழுந்த முதல்வர்.! பிரச்சினையே இல்லையென என அமைச்சர் பதில்..!

சென்னை கோயம்பேட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் கடந்த டிச.30-ம் தேதி திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்ட நாளில் இருந்தே, பயணிகளுக்கான வசதிகள் முழுமையாக ஏற்படுத்தி தரப்படவில்லை எனவும், இதனால் மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. அனைத்து பேருந்துகளும் முன்பதிவு செய்து நிரம்பி வழிந்ததால், முன்பதிவு செய்யாதவர்களை ஏற்ற மறுத்துவிட்டதால் பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. 

போக்குவரத்து வசதியில்லை, நெரிசல், அடிப்படை வசதிகளில்லை உள்ளிட்டவற்றை காரணம் காட்டி பொதுமக்கள், பயணிகள் அவ்வப்போது போராத்திலும் குதித்தனர். சமூக வலைதளங்களிலும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்த நிலையில், சட்டப்பேரவையில் இதுகுறித்து கேள்வியெழுப்பவுள்ளதாக அதிமுக அறிவித்தது. 

இந்நிலையில் செவ்வாய்கிழமை சட்டமன்றம் கூடிய போது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உரிய வசதிகள் இல்லை எனக் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், திட்டமே அதிமுகவால் தொடங்கப்பட்டதாகவும், அதனை திமுக முடித்து வைத்ததாகவும் கூறினார். பாரிமுனையில் இருந்து கோயம்பேட்டுக்கு பேருந்து நிலையத்தை மாற்றப்பட்ட போதும் இதே பிரச்சினை இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை மக்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டு பயணித்துக் கொண்டிருக்கின்றனர் எனக்கூறிய அவர், பேருந்தில் பயணிக்கும் யாரும் இதுகுறித்து புகார் தெரிவிக்கவில்லை எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூவை போன்றோர்தான் பிரச்னை செய்கின்றனர் எனவும் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கான 30 சதவீத பணிகளை மட்டுமே அதிமுக முடித்து விட்டுச் சென்றதாகவும் அதனை திமுக முழுமையாக முடித்துள்ளதாகவும் கூறினார். தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது என கூறிய அவர், பேருந்து நிலையத்துக்கு கலைஞர் பெயர் வைத்தது தான் எதிர்க்கட்சிகளுக்கு பிரச்சனை எனவும் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பயணிகள் பாதிப்பு குறித்து ஊடகங்களில் வெளி வந்த செய்திகளின் அடிப்படையில் தான் அறிக்கை வாயிலாக சுட்டிக்காட்டியதாகவும், சிறு சிறு பிரச்சினைகளையும் சரிசெய்து விட்டு பேருந்து நிலையத்தை திறந்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேருந்து நிலையத்தில் சிறு சிறு பிரச்சனை அல்ல, பெரிய பெரிய பிரச்சனைகளையும் தீர்த்து வைத்துள்ளோம் என குறிப்பிட்டார். எதிர்கட்சித்தலைவர் சுட்டிக்காட்டும் பிரச்சனைகளும் விரைவில் தீர்த்து வைக்கப்படும் எனவும் முதலமைச்சர் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow