கண்மாயில் மீன்பிடிப்பதில் தகராறு.. வலுக்கட்டாயமாக கைது செய்த போலீஸ்
குன்றக்குடியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாயில் மீன் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆபாசமாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே உள்ளது சாலிகிராமம். இங்கு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாய் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மீன்பிடித் திருவிழா நடத்துவது வழக்கம்.
இந்நிலையில் கண்மாய் வற்றியதால் சாலிகிராமம் மக்கள் மீன்பிடித் திருவிழா நடத்த ஏற்பாடு செய்தனர். ஆனால் கண்மாயில் மீன்பிடிக்க தாங்கள் குத்தகைக்கு எடுத்துள்ளதாக தனிநபர்கள் சிலர் கூறியுள்ளனர். மேலும் கண்மாயில் மீன்பிடிக்கக் கூடாது கிராம மக்களை அவர்கள் ஆபாசமாகத் திட்டி, மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், தங்களை ஆபாசமாகத் திட்டி, மிரட்டியவர்களை கைது செய்யக் கோரி குன்றக்குடி கோயில் அருகே அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தின்போது, தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர்.
சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட மறுத்ததால், காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.
What's Your Reaction?