போலீஸ் விசாரணையில் ரவுடி மர்ம மரணம்... சிக்கிய காவல் ஆய்வாளர்...

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே போலீஸ் விசாரணையின் போது சந்தேக மரணமடைந்த ரவுடியின், பிரேத பரிசோதனை இறுதி அறிக்கை வந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவடி காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.

Apr 21, 2024 - 21:15
போலீஸ் விசாரணையில் ரவுடி மர்ம மரணம்...  சிக்கிய காவல் ஆய்வாளர்...

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சாந்தகுமார் (30). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர், மற்றொரு சரித்திர பதிவேடு குற்றவாளியான PPG சங்கர் என்பவரது கொலையில் முக்கிய குற்றவாளி என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி, புட்லூர் பகுதியில் அவரது கூட்டாளிகளுடன், சந்தேகப்படும் வகையில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

 

இதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், அவர்களை மடக்கி பிடித்து, அவர்களிடமிருந்து கத்திகள் மற்றும் டம்மி துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இவர்கள் மற்றொரு குற்றச்செயல் புரிய சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது.

 

இது சம்மந்தமாக செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு, விசாரணையின் போது, சாந்தகுமார் (30) தனக்கு நெஞ்சு வலிப்பதாக தெரிவித்ததால், அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர் கூறியுள்ளனர்.

 

சாந்தகுமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி மற்றும் உறவினர்கள், அவரது உடலை வாங்க மறுத்தனர். இதனையடுத்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு திருவள்ளூர் குற்றவியல் நடுவர் விசாரணை செய்து வருகிறார். மேலும், இந்த வழக்கின் விசாரணை நியாயமான முறையில் நடைபெற வேண்டி, சாந்தகுமாரை விசாரித்த காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், சாந்தகுமாருக்கு இதயத்தில் ரத்த குழாய் அடைப்பு இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆவடி காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது. மேலும் அவரது இறப்பிற்கான காரணம் பிரேத பரிசோதனையின் இறுதி அறிக்கையில் தான் தெரிய வரும் என்பதால்,  பிரேத பரிசோதனையின் இறுதி அறிக்கை மற்றும் குற்றவியல் நடுவர் அவர்களின் விசாரணை அறிக்கையும் வந்த பின் இவ்வழக்கில் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

 

இதனை தொடர்ந்து இன்று (21.04.2024) சாந்தகுமாரின் மனைவி மற்றும் உறவினர்கள் சாந்தகுமாரின் உடலை பெற்றுக்கொண்டு அவரது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூர் கச்சிப்பட்டுக்கு இறுதி சடங்குகள் செய்வதற்காக எடுத்துச் சென்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow