கோவையில் தேர்தல் விதிமுறைகளை மீறினாரா அண்ணாமலை?... 4 பிரிவுகளின் கீழ் வழக்கு!
காவலர்களிடம் அவர் வாதிடும் வீடியோவை அண்ணாமலையே X தளத்தில் வெளியிட்டுள்ளார்
கோவை மக்களவை தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பிரசாரம் செய்ததாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது காவல்துறை நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறது. ஆனால், தாம் விதிமீறலில் ஈடுபட்டவில்லை என அண்ணாமலை வீடியோ வெளியிட்டு இருப்பதால் தேர்தல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டி இருக்கிறது.
மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அரசியல் தலைவர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம், தேர்தல் பறக்கும் படையினரும், காவல்துறையினரும் வேட்பாளர்களை ஸ்ட்ரிக்டாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் விதிமுறைகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கோவை சிங்காநல்லூரில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போது, சாலையில் கூடியிருந்த தொண்டர்களை கையசைத்தப்படி அண்ணாமலை சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது அவரது வாகனத்தை இடைமறித்த காவல்துறையினர் 10 மணிக்கு மேல் ஏன் பிரசாரம் செய்கிறீர்கள் என்று கூறி கேள்வி எழுப்பினர். இதனால் அவருக்கும் காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நான் பிரசாரம் செய்யவில்லை, வாகனத்தின் விளக்குகளைக் கூட அணைத்துவிட்டுத்தான் சென்றேன் என்று காவலர்களிடம் அவர் வாதிடும் வீடியோவை அண்ணாமலையே வெளியிட்டுள்ளார்.
காவல்துறை முதலமைச்சர் ஸ்டாலின் ஏவல் துறையாகச் செயல்படுகிறது என்றும், ஒருதலை பட்சமாக செயல்பட்டு பிரசாரத்தை முடக்கப் பார்ப்பது கண்டிக்கத்தக்கது என்றும் பதிவிட்டிருக்கிறார். இந்த நிலையில், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தல், அனுமதியின்றி கூட்டம் கூட்டியது உள்பட 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
What's Your Reaction?