எல்.முருகனை அவமதித்து பேசினேனா?- திமுக எம்.பி.,டிஆர்.பாலு விளக்கம்
நீங்கள் மலிவான மனிதரா என்பதை உங்கள் 65 வருட அரசியல் வாழ்க்கை தீர்மானிக்காது, உங்களுடைய சிந்தனையும் செயல்பாடுகளுமே தீர்மானிக்கும்
மத்திய இணையமைச்சர் எல்.முருகனை சாதி சார்ந்தும், அவமதித்து பேசவில்லை என்று திமுக எம்.பி.,டி.ஆர்.பாலு விளக்கம் அளித்துள்ளார்.
மக்களவையில் டி.ஆர்.பாலு எம்.பி பேசும்போது, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குறுக்கிட்டதால், நீங்கள் உங்காருங்கள், ஏன் இடையூறு செய்கிறீர்கள் என டி.ஆர்.பாலு ஆவேசமாக பேசினார்.டி.ஆர்.பாலுவின் பேச்சுக்கு பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பியதால் மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து வீடியோ வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், பட்டியல் சமூக மத்திய இணையமைச்சரை டி.ஆர்.பாலு அவமதித்து பேசியதாகவும், இதற்கு முன்பும் பட்டியலின தலைவர்களை அவமதித்து பேசியுள்ளதாகவும் பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.இந்த நிலையில், ஸ்பெயின் சுற்றுபயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க டி.ஆர்.பாலு சென்னை வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் பேசிய டி.ஆர்பாலுவிடம் அண்ணாமலையின் கருத்து குறித்து விளக்கம் கேட்கப்பட்டது.அதற்கு பதில் அளித்த அவர், "அண்ணாமலையெல்லாம் பெரியவரா? அவருக்கு பதில் சொல்ற அளவுக்கு நான் சீப்பா போயிட்டேனா.. என்று ஆவேசமானார். மக்களவையில் கேள்வி எழுப்பியது ஆ.ராசா.அவரும் தலித்துதான்.ஒரு தலித்தை பார்த்து ஒன்னோரு தலித் பேசலாமா? கேள்வி எழுப்பினார்.தலித் என்ற விவகாரம் பற்றி பேச நான் வரவில்லை. கேட்கப்பட்ட கேள்விக்கு துறை சார்ந்த மத்திய அமைச்சர், இணை அமைச்சர் பதில் அளிக்கலாம்.ஆனால் சம்பந்தமே இல்லாமல் எல்.முருகன் பேசினார்.
எனக்கு சாதி, மதம் கிடையாது.என்னை பொறுத்தவரையில் அனைவருமே ஒன்றுதான். அண்ணாமலை போன்றோர் அரசியல் ரீதியாக பேசினால் அதற்குகெல்லாம் பதில் சொல்ல முடியாது. 65 ஆண்டுகளுக்கு மேல் அரசியல் வாழ்வில் இருக்கிறேன்.நேற்று வந்த அண்ணாமலைக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை. அவருக்கு பதில் சொல்லும் அளவுக்கு தரம் தாழ்ந்து போயிட்டேனா’ என்றார்.
எல்.முருகன் தலித்தா? இல்லையா? என்பதை பார்த்து பதில் சொல்லவில்லை.துறைக்கு சம்மந்தமே இல்லாமல் பதில் அளிக்கிறார். பாஜகவினர் எனது பேச்சை திரித்து பரப்பி வருகின்றனர்.மக்களவையில் முதன்மை கேள்வியை ஆ.ராசாவும்,துணை கேள்வியை நானும் கேட்கிறோம். அதற்கு அந்த துறையை சாராத எல்.முருகன் குறுக்கிட என்ன அருகதை இருக்கிறது. நாங்கள் எல்லாம் தலித்துகளுக்கு விரோதிகளா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் தலித்துகள் என்றாலும், இந்துக்கள் என்றாலும் பாஜகதானா? ஏன் எங்களுக்கு சம்பந்தமில்லையா? சாதி சார்ந்த அரசியலை நாங்கள் ஒருபோதும் செய்ய மாட்டோம். அண்ணாமலை நேற்று அரசியலுக்கு வந்துவிட்டு இன்று கேள்வி கேட்கிறார். 66 வருடம் அரசியலில் இருப்பவரிடம் இப்படி கேள்வி கேட்கலாமா? என ஆதங்கப்பட்டார்.
ராமர் கோயிலை கட்டிவிட்டு இந்துக்களின் பாதுகாவலர்கள் நாங்கள் தான் என்று கூறுகிறார்கள். தமிழகத்திற்கு தர வேண்டிய வெள்ள நிவாரண நிதியை தராமல் மத்திய அரசு செயல்படுகிறது. அதை திசைத்திருப்பவே எல்.முருகன் செயல்பட்டுள்ளார். நாங்கள் எழுப்பிய கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர் பதில் அளிக்க மக்களவைக்கே வரவில்லை. பொறுப்புள்ள அமைச்சர் செய்யக்கூடிய செயலாக அது இல்லை. நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு எல்.முருகன் பேசினார். அதனால் தான் அவரை உட்கார சொன்னேன்.மற்றப்படி வேறு எதையும் நான் கூறவில்லை. இடைமறித்து பேசுவது சரிதான். அவர் பேசட்டும். அதற்கு முன்பாக நான் எனது கேள்வியை கேட்டுவிட்டு, பேசி முடித்த பின்னரே அவர்கள் பேச வேண்டும்.ஆனால் எல்.முருகன் குறுக்கிட்டு பேசினார். எனது தகுதிக்கு ஏற்ற தலைவர்களின் கேள்விக்கு பதில் அளிப்பேன் என்றும் இனிமேல் அண்ணாமலை போன்றவர்களின் கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள்" என்றார் ஆவேசத்துடன்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், "நீங்கள் மலிவான மனிதரா என்பதை உங்கள் 65 வருட அரசியல் வாழ்க்கை தீர்மானிக்காது, உங்களுடைய சிந்தனையும் செயல்பாடுகளுமே தீர்மானிக்கும் என்பதை திமுக பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுக்கு மிகப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?