வேங்கைவயல் வழக்கு:விசாரணையை தொடங்கிய புதிய அதிகாரி-தீர்வு கிடைக்குமா?
தஞ்சாவூர் சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனா புதிய விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார்.
வேங்கைவயல் தீண்டாமை சம்பவத்தில் சுமார் 400 நாட்கள் விசாரணை நடந்திருக்கும் நிலையில், இதுவரை விடை கிடைக்காத இந்த விவகாரத்தில் புதிய அதிகாரியான கல்பனா தீர்வு காண்பாரா? என்பதை பொறுத்திருந்த தான் பார்க்க வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டம் இறையூரை அடுத்த வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியலின சமூகத்தினர் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் சிலர் தீண்டாமை செயலில் ஈடுபட்டனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் எந்த தீர்வும் கிடைக்கவில்லை.
இந்த வழக்கை விசாரிக்க முதலில், சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது.அதன் பின்னர், கடந்த 2023-ஆம் ஆண்டு வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.அதில் சுமார் 147 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் டி.என்.ஏ பரிசோதனை உட்பட பல வகைகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த வழக்கில், குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
சி.பி.சி.ஐ.டி-யும் பல மாதங்களாகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் மந்தமான விசாரணை நடத்திவருவதாக, அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.சுமார் 400 நாட்களாக நடைபெற்ற விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது. இறுதியாக வேங்கைவயல் மற்றும் இறையூர், முத்துக்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த 10 பேருக்கு உண்மை கண்டரியும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே இதுநாள் வரை இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக செயல்பட்டு வந்த சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக தஞ்சாவூர் சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனா புதிய விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார்.
வழக்கில், விசாரணை அதிகாரிகள் மாற்றம் மட்டுமே நடக்கிறதே தவிர, 400 நாட்களைக் கடந்தும் வேங்கைவயல் வழக்கின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பது அப்பகுதி மக்களின் வேதனையாக இருக்கிறது.
What's Your Reaction?