சர்ஃபராஸ் கான்: தந்தையின் கனவை நிறைவேற்றிய மகன்!

எளிய மனிதர்கள் இழப்பதற்கு அவர்களிடம் எதிர்காலம் குறித்த கனவுகள் மட்டும்தான் இருக்கிறது.

Feb 16, 2024 - 12:19
சர்ஃபராஸ் கான்: தந்தையின் கனவை நிறைவேற்றிய மகன்!

கேஜிஎப் திரைப்படத்தில் தன் மகனை தாயே வளர்த்து உருவாக்கி இருந்தால் எப்படி இருக்கும்? அதுதான் சர்ஃபராஸ் கானின் கிரிக்கெட் வாழ்க்கை.அந்த திரைப்படத்தில் தாய்; இங்கு நிஜ வாழ்க்கையில் தந்தை. அதில் கேங்ஸ்டர் உலகம்; இதில் கிரிக்கெட் உலகம்.

சர்ஃபராஸ் கானின் வாழ்க்கை வரலாற்றை வெற்றி தோல்வி என்று எதற்குள்ளும் அடக்காமல், எங்கிருந்து எழுத ஆரம்பித்தாலும், அவரது பயிற்சியாளரானதந்தையைப் பிரித்து ஒரு வாக்கியத்தைக் கூட அமைத்து விட முடியாது.

அதேபோல் சர்ஃபராஸ் கான் இன்று இந்திய அணிக்கான டெஸ்ட் தொப்பியை பெற்ற போது, அந்தத் தொப்பியைக் கண்களில் ஒற்றி அவரது தந்தை நவ்ஷாத் கான் வடித்த கண்ணீர், ஒரு துரோகத்திற்கான உயிர்த்திரவ பதில்!

உத்தரப் பிரதேசத்தில் இருந்து வறுமையில் வந்த ஒரு சிறுவனை தத்தெடுத்து, தன் 225 சதுர அடி வீட்டில், தன் மகன்களோடு சேர்த்து வளர்த்து, பயிற்சி அளிக்கிறார் நவ்ஷாத் கான். அந்தக் குழந்தை சர்ஃபராஸ் கானோடு சேர்ந்து வளர்ந்து, U19 இந்திய அணி, ஐபிஎல் போட்டிக்குத் தகுதிப் பெறுகிறது.

தன் பயிற்சியாளருக்கு நன்றியைக் காட்ட வேண்டிய தருணத்தில், ஏழுவருட உறவை முறித்துக் கொண்டு "நான் என்னுடைய திறமையால்தான் இந்திய அணிக்குத் தகுதிப் பெற்றேன். உங்களுக்குத் திறமை இருந்தால் உங்களுடைய பையனை வளர்த்துப் பயிற்சி அளித்து இந்திய அணிக்கு அனுப்புங்கள்" என்று சவால்விட்டு செல்கிறது.

அந்த இடத்தில்தான் சர்ஃபராஸ் கானை இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வைத்தே ஆகவேண்டும் என்கின்ற நெருப்பு நௌஷாத் கான் இதயத்தில் எல்லா அறைகளிலும் எரிய ஆரம்பிக்கிறது.

பின்னாளில், 2015ஆம் ஆண்டு 17 வயதில் தன் மகன் சர்ஃபராஸ் கான் ஐபிஎல் தொடரில் விளையாட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு நவ்ஷாத் கான் அனுப்புகிறார். அந்த அணியின் டிரெஸ்ஸிங் ரூமை, தன் தந்தைக்குச் சவால் விட்டு சென்ற பெரிய குழந்தையோடு பகிர்ந்து கொள்கிறார் இளம் சர்ஃபராஸ்.

நவ்ஷாத் எடுத்து வளர்த்து கிரிக்கெட் வீரராக்கி, பின்பு பிரிந்து சென்ற அந்தக் குழந்தையின் பெயர் இக்பால் அப்துல்லா.  2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் சீசன் முதல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்காக விளையாடியவர் அவர். இந்த நிகழ்வு நடைபெற்ற பொழுது கூட, இதையொரு வெற்றியாகவே நெளஷாத் கான் கருதவில்லை. ஏனென்றால் தந்தைக்கும் மகனுக்கும் இலக்கு இந்திய அணி!

சர்ஃபராஸ் கானின் பெயர் 12 வயதிலேயே பள்ளிகளுக்கு இடையேயான ஹாரிஸ் சீ ல்டு தொடரில் வெளியே வந்துவிட்டது. அதில் ஒரு போட்டியில் 56 பவுண்டரிகள் 12 சிக்ஸர்கள் என ஒட்டுமொத்தமாக 439 ரன்கள் குவித்து சச்சின் செட் செய்திருந்த சாதனையை உடைத்து, எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருந்தார். அங்கிருந்து மும்பை மாநில U19அணி–2014 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் இந்தியாவுக்காக அண்டர் 19 உலகக்கோப்பையில் இருமுறை விளையாடிவிட்டார்.

மும்பை மாநில அணிக்காக 2013-14 ஆம் ஆண்டுகளில் விளையாடிய சர்ஃபராஸ் கான், வயதை ஏமாற்றியதாக மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் அவருக்குத் தடை விதிக்கிறது. மேலும் மும்பை கிரிக்கெட் அகாடமியில் இருந்தும் வெளியேற்றப்படுகிறார். ஒரு போட்டியின் முடிவில் U19 அணித் தேர்வாளார்களை பார்த்து முரட்டுத்தனமாக சைகைகள் செய்ததால் போட்டிக் கட்டணம் நிறுத்தப்படுகிறது. இதன் காரணமாக 2014-15 உள்நாட்டு சீசனில் விளையாட உத்தரப்பிரதேச அணிக்குச் செல்கிறார். அங்கு அவருக்கு சீசன்கள் சரியாக அமையவில்லை. இதைத்தொடர்ந்து 2019–20 உள்நாட்டு சீசனில் மும்பை அணிக்கு மீண்டும் திரும்புகிறார்.

தன்னுடைய முதல் ஐபிஎல் சீசனிலேயே இந்திய அளவில் யாரும் விளையாடாத மாடர்ன் கிரிக்கெட் ஷாட்களை தன் தந்தையின் மூலமாகக் கொண்டுவந்து விளையாடி ஆச்சரியப்பட வைத்த அவரால், அடுத்தடுத்து சீசன்களில் பெரிதாகச் சாதிக்க முடியவில்லை. 

இதற்கு நடுவில் 2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகள் வைத்திருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கழட்டி விடுகிறது. அடுத்து 2019 முதல் 2021 வரை பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருக்கிறார். அடுத்த இரண்டு ஆண்டுகள் 2023 வரை டெல்லி கேபிடல்ஸ் அணியில் தொடர்ந்து, நடந்து முடிந்த மினி ஏலத்தில் அவரது பெயர் இடம் பெற்றது விற்கப்படாத வீரர்கள் பட்டியலில்!

ஒரு கட்டத்தில் தன் அணியில் இருக்கும் வீரர்கள் நிறைய ரன்கள் எடுக்க, தன்னால் ரன்கள் குவிக்க முடியாத பொழுது  தினமும் மனதுக்குள் நொறுங்கி இருக்கிறார் சர்ஃபராஸ் கான். அந்த இடத்திலிருந்துதான் அதிக பந்துகளைச் சந்தித்து விளையாட வேண்டும் என்கின்ற சபதத்தைச் செய்து கொள்கிறார்.

இதனால் தன்னுடைய பயிற்சியைத் தீவிரமாக்குகிறார். போட்டிகள் இல்லாத நாளில் மூன்று வேளைகளிலும் பயிற்சிக்கு சென்று இருக்கிறார். போட்டி இருக்கும் பொழுது போட்டியை முடித்துவிட்டு ஓய்வு எடுக்காமல் மாலையில் பயிற்சிக்குச் சென்று இருக்கிறார். பயிற்சி செய்து செய்து அவர் மூளையும் தசையும் அதிக பந்துகளைச் சந்திப்பதை இயல்பாக்கிக் கொண்டது. இதனால் 100 பந்துகள் சந்தித்து ஆட்டம் இழந்தால் கூட, அதை ஏற்றுக்கொள்ளவே முடியாத மனநிலைக்குச் சர்ஃபராஸ் கான் வந்திருக்கிறார்.

தவநிலையை ஒத்த பயிற்சியின் காரணமாக மும்பை அணிக்காக அடுத்தடுத்த இரண்டு ஐபிஎல் சீசன்களில் 900 ரன்களுக்கு மேல் இரண்டு முறை குவித்த வீரராக பிரமிக்க வைக்கிறார். தொடர்ந்து மூன்று சீசன்களில் 27 போட்டிகளில் ஐந்து அரைசதங்கள், பத்துச் சதங்களை அடிக்கிறார். மூன்று சீசர்களின் ரன் சராசரி மட்டும் 100க்கு மேல் வருகிறது.

அவர் முதல் இரண்டு சீசன்களில் வெற்றிகரமாக விளையாடியதுமே 2022ஆம் ஆண்டிலேயே இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இடம் கிடைக்கவில்லை. உடனே மும்பை அணிக்காக விளையாடி அதிரடியாய் ஒரு சதத்தை அடித்த சர்ஃபராஸ், அந்த மகிழ்ச்சியை தன்னுடைய பயிற்சியாளர் உடன் ஆக்ரோஷமாக பகிர்ந்து கொள்கிறார்.

2022ஆம் ஆண்டு பங்களாதேஷ் தொடரில் சர்ஃபராஸ் கானைத் தேர்வு செய்யாததற்கு, களத்தில் ஒழுக்கமான முறையில் நடக்க வேண்டும் என்கின்ற ஒரு காரணத்தையும் தேர்வுக்குழு முன்வைக்கிறது. இந்த இடத்தில்தான் சர்ஃபராஸ் கானுக்கு நடந்தது அநியாயம் என்கின்ற குரல் வேகமாக எழ ஆரம்பித்தன.

கடைசியாக இன்று தன் மகனுக்கு வாய்ப்பு கிடைத்துவிட "கிரிக்கெட் ஜென்டில்மேன் விளையாட்டு இல்லை அனைவருக்குமான விளையாட்டு" என்ற வாசகம் பொரித்த சட்டையை நௌஷாத் கான் அணிந்து வந்தது யாருக்கான பதில் என்று தெரியவில்லை. ஆனால் வாய்ப்பு கிடைத்த பிறகும் பதில் சொல்லாமல் விடுவதில்லை என்கின்ற போராட்ட குணம்தான் தந்தை மகன் இருவரையுமே இன்று இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.

ரயிலில் வெள்ளரி விற்றது ஆரம்பித்து, மகனோடு இருசக்கர வாகனத்தில் வெயிலில் ட்ராக் பேண்டுகள் விற்றது முதல் தந்தைக்கும் மகனுக்குமான பிணைப்பு மிக இறுக்கமானது.

அர்ஜுன் டெண்டுல்கர் கார், ஐ-பேட் எல்லாம் வைத்திருக்கிறார் என்று தந்தையிடம் கூறிவிட்டு, உடனே தன் தந்தை மனம் நோகாமல் "நான்தான் அர்ஜுனை விட அதிர்ஷ்டசாலி. ஏனென்றால் அவர் நினைத்தபோது அவர் தந்தை உடன் இருக்க மாட்டார். ஆனால் எனக்கு நீங்கள் எப்போதுமே இருப்பீர்கள்" என்று கூறியிருக்கிறார்.

இரண்டு இதயங்களில் ஒரே நெருப்பு; இரண்டு மூளைகளில் ஒரே இலக்கு; நான்கு கண்களில் ஒரே கனவு. இப்படித்தான் வரிந்து கொண்ட இலட்சியத்திற்கு இருவருமே தங்களை ஒப்புக் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனாலும் இந்த எளிய மனிதர்கள் வாழ்வை எவ்வளவு அழகாக புரிந்து இருக்கிறார்கள் என்றால், நௌஷாத் கான் கூறும்பொழுது "நாங்கள் சேரியில்  இருந்து வந்தோம். எங்கள் மகன்கள் காலையில் கழிவறைக்குச் செல்வதற்காக வரிசையில் அறைந்து கொண்டு நிற்பார்கள். நாங்கள் எதுவும் இல்லாமல் வந்தது போல, எதுவும் இல்லாமலும் போவோம். சர்ஃபராஸ் கான் சில நேரங்களில் 'அப்பு இது எதுவும் நடக்காவிட்டால், நாம் மீண்டும் எப்பொழுது வேண்டுமானாலும் ட்ராக் பேண்ட் விற்கப் போகலாம்" என்பான்" என்கிறார்.

எளிய மனிதர்கள் இழப்பதற்கு அவர்களிடம் எதிர்காலம் குறித்த கனவுகள் மட்டும்தான் இருக்கிறது. கருணையற்ற இந்த உலகம் இந்தக் கனவுகளை சிதைப்பதற்கு எப்பொழுதும் காத்திருக்கிறது. ஆனால் எல்லாம்தாண்டி வெற்றி பெறும் எளிய மனிதர்களின் கதைகள்தான், இன்னும் இன்னும் எத்தனையோ எளிய மனிதர்களுக்கான எதிர்கால கனவுகளாக பரிணமிக்கிறது. இதற்காகவே எளிய மனிதர்கள் அமைத்துக் கொண்ட இலக்கை எட்டட்டும். இவர்கள் கைக்கொண்டு இன்னும் பலர் இந்திய கிரிக்கெட்டின் கதவுகளைத் தட்டட்டும்!

நன்றி: ரிச்சர்ட்ஸ்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow