காஞ்சிபுரத்தில் பேருந்து முன் படுத்து தொழிலாளர்கள் போராட்டம்

30-க்கும் மேற்பட்ட சிஐடியூ தொழிற்சங்கத்தினரை கைது செய்த போலீசார் தனியார் திருமண மண்டபங்களில் அடைத்தனர்.

Jan 10, 2024 - 16:17
Jan 10, 2024 - 18:35
காஞ்சிபுரத்தில் பேருந்து முன் படுத்து தொழிலாளர்கள் போராட்டம்

காஞ்சிபுரத்தில் ஓடும் பேருந்து முன்பு படுத்து போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தமிழகம் முழுவதும் 6 அம்ச கோரிக்கையினை வலியுறுத்தி சிஐடியூ, அண்ணா தொழிற்சங்கம், ஏஐடியுசி போன்ற தொழிற்சங்களை சார்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் நேற்றைய தினம் முதல் ஈடுபட்டு வருகின்றனர்‌. இந்தப் போராட்டமானது இன்று இரண்டாம் நாளை எட்டியிருக்கிறது. வேலை நிறுத்த போராட்டத்தின் முதல் நாளான நேற்று காஞ்சிபுரம் பணிமனைகளில் இருந்து 50% பேருந்துகளானது இயக்கப்பட்டது.இதனால் 50% பேருந்து போக்குவரத்து ஆனது பாதிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இன்று அனைத்து வழித்தடங்களிலும் 100% பேருந்துகளானது பணிமனையில் இருந்து வழிதடங்களில் தனியார் பேருந்து ஓட்டுநர்களை வைத்தும், தற்காலிக ஓட்டுநர்களை வைத்தும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வேலை நிறுத்த போராட்டத்தின் இரண்டாம் நாளான இன்று காஞ்சிபுரம் பேருந்து நிலைய பணிமனை வாயில் முன்பு சிஐடியூ, அண்ணா தொழிற்சங்கத்தினர் என பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது திடீரென சிஐடியூ-வை சேர்ந்த தொழிற்சங்கத்தினர் சிலர் பேருந்துகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் சில தொழிலாளர்கள் பேருந்துகளை முன்பாக படுத்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து போராட்டக்காரர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தின. சுமார் 30-க்கும் மேற்பட்ட சிஐடியூ தொழிற்சங்கத்தினரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.போக்குவரத்து தொழிலாளர்கள் திடீரென மறியல் போராட்டத்திலும்,பேருந்துகளின் முன்பு படுத்து போராட்டங்களிலும் ஈடுபட்டதால் பேருந்து நிலையம் பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow