இரவில் லைட் எரியாமல் நடுவழியில் நின்ற அரசு பேருந்து-150 பயணிகள் தவிப்பு
முகப்பு விளக்கு எரியாததால் பேருந்து அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு ஓட்டி செல்லப்பட்டது.
உளுந்தூர்பேட்டை அருகே ஆதனூர் கிராமத்தில் அரசு பேருந்து முன்பக்க லைட் எரியாமல் நடுவழியில் நின்றதால் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் இருந்து அரசு பேருந்து சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை ஏற்றுக்கொண்டு மூலசமுத்திரம் கொண்டலவாடி காம்பட்டு ஆகிய கிராமங்கள் வழியாக ஆதனூர் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தது.இந்த பேருந்து உளுந்தூர்பேட்டையை அடுத்த மூலசமுத்திரம் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென முகப்பு விளக்கு எரியாமல் நின்று போனது.இதனால் கிராமப்புறங்களில் செல்லும் இந்த பேருந்தை முகப்பு விளக்கு எரியாமல் ஓட்டி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
பேருந்து ஓட்டுநர் பேருந்தை அதே இடத்தில் நிறுத்தினார்.பின்னர் பேருந்தில் இருந்த எலக்ட்ரீசியன் ஒருவரை வைத்து சுமார் 45 நிமிடம் முகப்பு விளக்கு எரிய வைக்க முடியுமா என்று முயற்சி செய்தும், அது பலன் அளிக்காததால் அந்த முயற்சியை கைவிட்டு பேருந்து அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு ஓட்டி செல்லப்பட்டது.
நடுவழியில் பேருந்து நிறுத்தப்பட்டு முகப்பு விளக்கு எரியாததால் பேருந்தில் இருந்த மாணவிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு வீட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.இதேபோல் சென்னை மாநகர பேருந்து ஒன்றில் பலகை உடைந்து பயணி ஒருவர் கீழே விழுந்த சம்பவம் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிஷ்டவசமாக சேதம் ஏதுமின்றி பெண் காப்பாற்றப்பட்டார். பேருந்தை முறையாக பராமரிக்காத பணிமனை ஊழியர்கள் இருவர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அரசு பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். அரசு பேருந்துகள் பராமரிக்காத காரணத்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாகவும், முறையாக பராமரித்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
What's Your Reaction?