காதல் திருமணம் செய்த மகள் ஆணவக்கொலை-தஞ்சையில் பெற்றோர் கைது

பெண்ணின் தந்தை , தாய் ஆகிய இருவரையும் கைது செய்து பட்டுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தியுள்ளனர்.

Jan 10, 2024 - 18:34
காதல் திருமணம் செய்த மகள் ஆணவக்கொலை-தஞ்சையில் பெற்றோர் கைது

பட்டுக்கோட்டை அருகே மாற்று சமூக இளைஞனை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட பெண்ணை கொலை செய்து எரித்த பெற்றோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள நெய்வவிடுதி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் - ரோஜா தம்பதி. இவர்களது மகள் ஐஸ்வர்யா(19). இவரும் பூவாளூர் பகுதியைச் சேர்ந்த நவீன்(19) என்பவரும் பள்ளியில் படிக்கும்போதே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் இருவரும் திருப்பூரில் உள்ள அரவப்பாளையத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளனர்.இவர்களது காதல் ஐஸ்வர்யாவில் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஐஸ்வர்யாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, ஐஸ்வர்யாவுக்கு வேறு ஒரு மாப்பிள்ளையோடு திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் இருவரும் கடந்த டிச.31ம் தேதி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

மேலும், இருவரும் திருப்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளனர்.இச்சம்பவம் ஐஸ்வர்யாவின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத்தொடர்ந்து கடந்த 2ம் தேதி பல்லடம் போலீசார் ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்தி அவரது தந்தை மற்றும் உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர். இதன் பின்னர் 3ம் தேதி நவீனை தொடர்புகொண்ட அவரது நண்பர்கள், ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அடித்து துன்புறுத்தி கொலை செய்து எரித்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நவீன் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா ஆவணக்கொலை செய்யப்பட்டதாக புகார் அளித்துள்ளார். போலீஸ் விசாரணையில் ஐஸ்வர்யா மர்மமான முறையில் இறந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, போலீசார் ஐஸ்வர்யா உடல்ன் எரிக்கப்பட்ட சுடுகாட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு உடல் எரிக்கப்பட்ட பின் சாம்பல் கூட இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த ஐஸ்வர்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் தலைமையில் நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், தாய் ரோஜா இருவரையும் கைது செய்து பட்டுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தியுள்ளனர். அதனைத்தொடர்ந்து குற்றவியல் நீதித்துறை நடுவர் சத்யா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். நீதிபதி இருவரையும்  15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow