புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு... விசாரணையை தொடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு...
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
புதுச்சேரியில் சோலை நகர் பகுதியைச் சேர்ந்த 9 வயதான ஒரு சிறுமி அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சனிக்கிழமை (2.03.2024) அன்று தெருவில் விளையாடுவதற்காக சென்ற அவர், வெகுநேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடி அலைந்தனர். தொடர்ந்து புகாரின் பேரில், சிறுமி விளையாடச் சென்ற இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அம்பேத்கர் நகர் கால்வாயில் இருந்து ஒரு மூட்டையை கைப்பற்றினர். அதில், காணாமல் போன 9 வயது சிறுமியின் உடல் சிதைந்த நிலையில் இருந்துள்ளது. கை கால்கள் உடைந்து கயிறுகளால் கட்டப்பட்டு, உடல் எல்லாம் ரத்தக் காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமியின் உடல் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த கோர சம்பவத்தில் ஈடுபட்ட 19 வயதான கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணையில் ஈடுபட்டனர். விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டல் செய்த போது, சிறுமி சத்தம் போட்டதால் இருவரும் சேர்ந்து அந்த சிறு குழந்தையை அடித்து சித்ரவதை செய்ததில், குழந்தை இறந்ததாக தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் உடலை மூட்டையாகக் கட்டி கால்வாயில் வீசிச் சென்றதாக இருவரும் வாக்குமூலம் அளித்தனர். இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் கண்டனங்களை பதிவு செய்து வரும் நிலையில், குழந்தைக்கு நீதிக் கேட்டு புதுச்சேரியில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து IPS அதிகாரி கலைவாணன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் உள்ள மேலும் 5 பேரிடமும் சிறப்புக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
What's Your Reaction?