திருநங்கைகள் பறித்துச்சென்ற பணத்தை கேட்டவர் அடித்துக்கொலை
ஆனைக்காரன் பாளையத்தை சேர்ந்த 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கும்பகோணம் பேருந்து நிலையத்தில் திருநங்கைகள் பறித்துச்சென்ற பணத்தை திரும்ப கேட்டவர் திருநங்கைகளின் ஆதரவாளர்களால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் பேருந்து நிலையத்திற்கு பல்வேறு ஊர்களுக்கு செல்ல இரவு நேரங்களில் வரும் பயணிகளுக்கு பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றி திரியும் திருநங்கைகளால் தினம்தோறும் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.நேற்று இரவு பந்தநல்லூரில் இருந்து ரமேஷ் மற்றும் அவரது நண்பர்களுடன் திருப்பூர் வேலைக்கு செல்ல கும்பகோணம் பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளனர்.
அப்போது ரமேசிடம் இரவு நேரங்களில் பேருந்து நிலையத்திற்குள் உலா வரும் திருநங்கைகள் இருவர் சென்று பணம் கேட்டுள்ளனர்.அவர் இல்லை என சொல்ல அவர் பாக்கெட்டில் இருந்த பணத்தை திருநங்கைகள் தானாகவே எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது.அதற்கு ரமேஷ், நான் வெளியூர் செல்ல வேண்டி இருப்பதால் பணம் எனக்கு தேவை கொடுங்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
திருநங்கைகள் அவரை தள்ளிவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.திருநங்கைகள் செல்லும் முன் யாருக்கோ தொலைபேசியில் தகவல் தெரிவித்துவிட்டு சென்றுள்ளனர்.சிறிது நேரத்திற்குள் நான்கு பேர் கொண்ட ஒரு கும்பல் ஒரே டூவீலரில் அங்கு வந்து பேருந்துக்காக காத்திருந்த ரமேஷை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இந்த தாக்குதலால் நிலைகுலைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே மயங்கி சரிந்தார்.இந்த கொலை வெறி தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றி விட்டு அந்த கும்பல் அங்கிருந்து ஒரே டூவீலரில் ஏறி தப்பித்து சென்றுள்ளனர்.நிலைகுலைந்த ரமேஷை உடனடியாக அவரது நண்பர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.பரிசோதித்த மருத்துவர்கள் ரமேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை காவல்துறையினர் விரைந்து சென்று பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர்கள் அனைவரும் கும்பகோணம் ஆனைக்காரன் பாளையத்தை சேர்ந்த மிஷின் ( 21 ) ,கோகுல் (24) , ரூபன் (21) மற்றும் 17 வயது நிரம்பிய சிறுவன் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்கள் மீது 294.b மற்றும் 302 -ன் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.கைது செய்த அவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்து பின் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
கும்பகோணம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் திருநங்கைகள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
மேலும் இரவு நேரங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடும் திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் தயங்கி வருவதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
What's Your Reaction?