அரசின் உத்தரவு வந்தபோதும் மாற்றப்படாத மதுபானக்கடை.... தேர் பாதையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ... ! 

அரசு உத்தரவு வந்த பின்பும் மாற்றப்படாத கடையை உடனடியாக அகற்றக்கோரி 6 மணி நேரம் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

Mar 7, 2024 - 07:43
அரசின் உத்தரவு வந்தபோதும் மாற்றப்படாத மதுபானக்கடை.... தேர் பாதையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ... ! 

திருப்பூர் தாராபுரம் அருகே மதுபான கடையை அகற்றக் கோரி ஆறு மணி நேரமாக பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தேர் பாதை என்ற இடத்தில் 3830 என்ற எண் கொண்ட மதுபானக் கடை, கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் சிலர் குடித்து விட்டு அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் தொடர் ரகளையில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து தொகுதிக்கு வந்த அமைச்சர் கயல்விழியிடம் மக்கள் புகார் தெரிவித்தனர். இதன்பின் அமைச்சர் உத்தரவின் பேரில் மோளரப்பட்டி கிராமத்திற்கு டாஸ்மாக் கடையை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.

அதன்படி அந்த மதுபானக்கடை  மோளரபட்டி என்ற கிராமத்தில் அமைவதற்கு தற்போது ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த தகவலை அறிந்த அப்பகுதியினர் போராட்டத்தில் குதித்து, மதுபானக்கடை வேண்டாம் என கண்டனம் தெரிவித்தனர். இதேவேளையில் மதுபானக்கடையை கமுக்கமாக தேர் பாதையில் திறந்து படுஜோராக விற்பனையை நடத்தியதாகவும் தகவல் வெளியானது. இதனால் ஆத்திரமடைந்த தேர்பகுதி மக்கள், அரசு உத்தரவு வந்த பின்பும் மாற்றப்படாத கடையை உடனடியாக அகற்றக்கோரி 6 மணி நேரம் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அப்பகுதி பெண் ஒருவர், இந்த மதுபானக்கடையை கடந்து செல்லும் போதெல்லாம் அத்துமீறல்களை கடந்து செல்ல வேண்டிய நிலையே இருப்பதாகவும், இந்த பிரச்சனை குழந்தைகளுக்கு ஏற்படக்கூடாது என 12 கிலோமீட்டர் தூரம் உள்ள பள்ளியில் குழந்தைகளை சேர்த்துள்ளதாகவும் வேதனை தெரிவித்தார். இதனால் விரைந்து மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என மக்கள் வலுவான கோரிக்கையை முன்வைத்திருக்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow