தேர்தல் பத்திரங்கள் முறைகேடு... மோடி ஊழலின் நாயகன்... விளாசிய ராகுல் காந்தி
நான் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறேனா என்பது குறித்து கட்சி மேலிடம்தான் முடிவெடுக்கும் - ராகுல் காந்தி
தவறான பொருளாதாரக் கொள்கைகளால் நாட்டின் வேலைவாய்ப்பை பாஜக பாதித்துள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருக்கிறார்.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உடன் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,“தேர்தலுக்கு முன் நான் கணிப்பெல்லாம் செய்ய மாட்டேன். ஆனால் 30 நாட்களுக்கு முன் பாஜக 180 இடங்களைக் கைப்பற்றும் என அனுமானித்தேன். ஆனால் இப்போது 150 இடங்களை மட்டுமே பிடிக்கும் என்று தெரிய வருகிறது.
இந்தியா கூட்டணிக்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் செல்வாக்கு அதிகரித்து வருவதாகத் தகவல்கள் கிடைக்கின்றன. குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் உருவாக்கியிருப்பது வலுவான கூட்டணி” என்று பேசினார்.
“கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு, அதானி போன்ற பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக இருந்துகொண்டு, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற தவறான பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டு வந்து நாட்டின் வேலைவாய்ப்பைக் கடுமையாக பாதித்துள்ளது. இதைச் சரி செய்வதற்காகவே தொழிற்பயிற்சிக்கான உரிமை என்ற தேர்தல் வாக்குறுதியை அளித்திருக்கிறோம். இதன்மூலம் நாட்டில் உள்ள பட்டதாரி இளைஞர்கள் அனைவருக்கும் இலவச தொழிற்பயிற்சிக்கான உத்தரவாதத்தோடு, வங்கிக் கணக்குகளில் ரூ.1 லட்சம் வைப்பு நிதியாக அரசு சார்பாக ஆண்டுதோறும் வழங்கப்படவுள்ளது” என்றும் கூறினார்.
“தேர்தல் பத்திரங்கள் உலகின் மிகப்பெரிய முறைகேடு. அது தொழிலதிபர்களுக்கும் தெரியும். மோடி என்னதான் விளக்கங்கள் அளித்தாலும் மக்கள் ஏமாற மாட்டார்கள். ஏனென்றால் மோடி ஊழல்களின் நாயகன் என்பதை மக்களும் அறிவார்கள். நான் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறேனா என்பது குறித்து கட்சி மேலிடம்தான் முடிவெடுக்கும்” என்றும் ராகுல் காந்தி பேசினார்.
What's Your Reaction?